கேட்டது தரும் கோட்டை மாரியம்மன்!
பக்தர்களுக்குக் கேட்ட வரங்களை அருளி தருவதால் "கோட்டை மாரியம்மன்' என்றே அழைக்கப்படுகிறாள்.
சேர, சோழ, பாண்டிய நாடுகளின் நடுப்பகுதியில் அமைந்த அழகிய நகரம் திண்டுக்கல். ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம், இந்நகரை பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகக் கூறுகிறது.
1788-1790-ஆம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்பு சுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்குப் பக்கத்தில் இருந்த கவாத்து (போர்ப் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்ரகமும் அமைத்து வழிபட்டனர். அதுவே அவர்களுக்குக் காவல் தெய்வமாக இருந்துள்ளது.
அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கத் தொடங்கிய மாரியம்மன், பக்தர்களுக்குக் கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோயில் அமையப்பெற்றதாலும் "கோட்டை மாரியம்மன்' என்றே அழைக்கப்படுகிறாள்.
கருவறை சதுரவடிவ அமைப்பைக் கொண்டது. இதன் கூரை தாழ்வாக உள்ளது. கருவறையின் மேலே ஒரு விமானம் (கோபுரம்) உண்டு. ஆரம்பத்தில் இது வெறும் மண்ணால் கட்டப்பட்டு இருந்தது. பீடம் மட்டுமே இருந்த இடம் பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டு, அம்மனின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலையைத் தனியாக வெளியே எடுக்க இயலாது. தரையோடு தரையாக வெகு ஆழத்தில் புதைந்துள்ளது.
கோட்டை மாரியம்மன் மூலஸ்தான விக்ரகம் ஆவுடையார் பீடத்தில் வலது கால் தொங்கவிட்டபடி, இடது காலை மடக்கி வீர ஆசனத்தில் அம்மன் அமர்ந்த நிலையில் உள்ளது. இவர் கோரைப்பற்களுடன் காளி அம்சம் பொருந்திய மாரியம்மன் ஆவார்.
அம்மனுக்கு எட்டுக் கரங்கள். வலப் பக்கம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதமும், இடது பக்கம் வாள், கேடயம், வில், குங்கும கமலம் போன்றவை காணப்படுகின்றன.
இச்சிலையின் பின்புறத்தில் ஒரு துவாரம் உள்ளது. இது அம்மனுக்கே உரிய சிறப்பு அம்சமாகும் என்று
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டு வியந்துள்ளார்.
கொடி மரம், மூலஸ்தான அம்மன், கோபுரக் கலசம் மூன்றையும் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு. 18}ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகமும் மட்டும் இருந்தது. சில வருடங்கள் கடந்து கர்ப்பக்கிரகம் கட்டப்பட்டது.
பெண் தெய்வமான மாரியம்மன் தசாவதாரம் எடுப்பதும், தெப்ப உற்சவத்தின் போது அம்மன் சயன கோலத்தில் காட்சியளிப்பதும் இத்திருக்கோயிலின் சிறப்பு.
கோயிலில் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பத்து நாள் கொண்ட பெரிய திருவிழாவானது, 1956}ஆம் ஆண்டு முதல் 17 நாள்கள் கொண்ட திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
விழா வருவதை முன்கூட்டியே அறிவிப்பது போல் சாமி சாட்டுதலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு, பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படியினர் கோட்டை மாரியம்மனையும், திருக்கோயில் மண்டபங்களையும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை ஏற்பாடு செய்து திருவிழா சூழலை ஏற்படுத்துகின்றனர்.
அம்மனிடம் பிரார்த்தனை செய்துகொண்ட பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் மாசி திருவிழாவின்போது அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பால்
குடம் , அக்கினிச்சட்டி, தீ மிதித்தல் , அங்கபிரதட்சணம் செய்து வழிபடுகின்றனர்.
குழந்தை வரம் கேட்டு வேண்டுதல் நிறைவேறியவர்கள் கரும்பில் தொட்டில் கட்டி அத்தொட்டிலில் குழந்தையை படுக்கவைத்து கோயிலை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
மேலும் ஆடி வெள்ளி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் , மாவிளக்கு செய்து வழிபடுவதோடு கூழ் காய்ச்சி அனைத்துப் பக்தர்களுக்கும் வழங்கி தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர் .
தினமும் காலை 6 முதல் நண்பகல் ஒரு மணிவரையும், மாலை 4 மணிமுதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் இந்தக் கோயில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல் புகை வண்டி நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும்,
அழகிய மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
- சோழவந்தான் ஜெனகராஜ்