வெள்ளிமணி

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

சப்தரிஷீஸ்வரர் கோயிலில் திருமண யோகத்தை பெறும் வழிபாடு

பொ. ஜெயசந்திரன்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

திருநாவுக்கரசர் தேவாரப் பதிகத்தில் "பண்டெழுவர் தவத்துறை' என்று இத்தலம் அழைக்கப்பட்டுள்ளது. இது வைப்புத்தலங்களுள் ஒன்றாக இருந்தாலும், தவத்துறைவானவர் தாள் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்றமிழ் மாலை கொண்டேத்தி என்று பெரிய புராணத்தில் குறிக்கப்படுவதால், திருஞானசம்பந்தரால் இங்கு தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தங்களைக் காக்க வேண்டி, தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். அவர் திருவருளால் முருகக் கடவுளை குழந்தையாகத் தோன்றச் செய்து, சப்தரிஷிகளின் ஆசிரமத்தில் விட்டார். ரிஷி பத்தினிகளில் அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே, கார்த்திகைப் பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியைக் கேட்ட முனிவர்கள், மனைவியர்களைச் சபித்து விரட்டிவிட்டனர்.

இதன் காரணமாக முருகனும் முனிவர்களைச் சபிக்க, அவர்கள் சாபம் நீங்கும் பொருட்டு திருவையாறு சென்று தங்கி, அங்கிருந்து இத்தலத்துக்கு வந்து தவம் செய்து, தங்கள் சாபம் நீங்கப் பெற்று பெருமான் திருவருளைப் பெற்றனர்.

ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால், இத்தலப் பெருமானுக்கு "சப்தரிஷீஸ்வரர்' என்றும், அம்மனுக்கு "பெருந்திருப்பிராட்டியார்' என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. இங்கு தீர்த்தமாக சிவகங்கை தீர்த்தமும், தலவிருட்சமாக அரசமரமும் உள்ளன.

திருமணமாகாத ஆண், பெண்கள் இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமாங்கல்ய மகரிஷி முனிவருக்கும், ஸ்ரீசப்தரிஷிகளுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்குள்ள ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் சந்நிதியில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திருக்கோயிலில் ஜுரஹரேஸ்வரர் அருவுருவமாக இருக்கிறார். தீராத ஜுரம் உள்ளவர்கள் வேண்டிக் கொண்டு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் தீராத ஜுரம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

இங்கு முப்பெரும் தேவியரான ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமகாலட்சுமியும் அருள்பாலிக்கின்றனர். அருணகிரிநாதர், திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தியாகபிரம்மம் தியாகராஜர் ஆகியோரால் பாடல் பெற்றுள்ள சிறப்புடையது இத்தலம். ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையில் இங்குள்ள சப்தரிஷீஸ்வரரை மனம் உருகி வேண்டினால், சகல துன்பங்களையும் தீர்த்து வைப்பார் என்று நம்பப்படுகிறது

இத்தலத்தில் பங்குனித் திருவிழாவின் 9}ஆம் நாள் சுவாமி எழுந்தருள கலைநயமிக்க 25அடி உயரம் உள்ள மிகப்பழைமையான மரத்தாலான திருத்தேர் உள்ளது. இதில் ஏழு அடுக்குகள் உள்ளது. இந்த ஏழு அடுக்குகளில் கலை நுணுக்கமிக்க புராணச் செய்தியை தாங்கிய அற்புதமான சிற்பங்கள் உள்ளன.

ஒன்பதடி உயரமுடைய நான்கு சக்கரங்களும், 7அடி உயரமுடைய இரண்டு நடுச்சக்கரங்களுமாக 6 சக்கரங்கள் இத்தேரினை தாங்கி நிற்கின்றது. பங்குனிப் பெருவிழாவின் 9}ஆம் நாளில் இக்கோயிலில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களிலேயே மிகவும் சிறப்பு பெற்றது அருள்மிகு நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசன விழா.

ஆதிரைப் பெருவிழாவில் 9}ஆம் நாளான 2026, ஜனவரி 2}ஆம் தேதி அருள்மிகு சோமாஸ்கந்தர் புறப்பாடு, நடராஜப் பெருமான் வெள்ளை சாத்தி புறப்பாடு, இரவு நடராஜப் பெருமான் சிவகாமிசுந்தரி மஹா அபிஷேகம், 3}ஆம் தேதி இரவு அருள்மிகு நடராஜப் பெருமான் ~ஆனந்த தரிசனம், 4}ஆம் தேதி அருள்மிகு மாணிக்கவாசகர் புறப்பாடு, நடராஜப் பெருமான் விடையாற்றி விழா நடைபெறுகிறது.

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% அதிகரிப்பு!

உத்தரப் பிரதேசம்: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரைக் கொன்ற இளம்பெண் கைது!

ஆஃப் ஸ்பின், விக்கெட் கீப்பிங், மிடில் ஆர்டர் பேட்டிங் செய்துள்ளேன்: ஜஸ்பிரித் பும்ரா

மத்தியப் பிரதேசம்: நர்மதா நதிக்கரை அருகே இறந்த நிலையில் 200 கிளிகள் கண்டெடுப்பு

சாகித்திய சம்மான் விருது விழா: புனைவுக்கான பிரிவில் விருது பெற்ற எழுத்தாளர் சுபி தாபா!

SCROLL FOR NEXT