சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புட்பகிரி, சென்னியங்கிரி எனப் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படும் திருத்தலம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். சென்னிமலை என்றால் தலைமையான மலை என்று பொருள்படும்.
சென்னிமலையின் அடிவாரத்தில் எட்டுத் திசைகளிலும், பல்வேறு கோயில்கள் அமைந்துள்ளன. மலையின் தென்புறம் செவ்வந்திசுவரர், கன்னி மூலையில் இந்திர விநாயகர், சிவன் கோயிலுக்கு மேற்கில் பெருமாள் கோயில், வடமேற்கில் நர்த்தன விநாயகர், துர்க்கையம்மன் கோயில், ஈசான திசையில் காமாட்சியம்மன் கோயில், அக்னி மூலையில் மாரியம்மன் கோயில், தெற்கே செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் ஆகிய கோயில்களுக்கு நடுநாயகமாக கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் வரலாறு புராணத்துடன் சம்பந்தப்பட்டது. ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் பலப்பரீட்சை நிகழ்ந்தபோது, மேருமலையை அனந்தன் சுற்றிக் கொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, வாயுதேவன் புயல் போலக் காற்றை கடுமையாக வீசி, அவனது பிடியிலிருந்து மலையை விடுவிக்க முயன்றார். அப்போது மேருவின் சிகரப் பகுதி முறிந்து, பூவுலகில் பூந்துறை நாட்டில் விழுந்தது. அதுவே "சிரகிரி' என்று அழைக்கப்படுகிறது.
நொய்யலாற்றின் கரையில், சென்னிமலைக்கு அருகாமையில் கொடுமணல் எனும் கிராமம் உள்ளது. மிகவும் தொன்மையான ஊர். பண்ணையாரின் பசுக்களில் ஒன்று ஓரிடத்தில் தானே வலியச் சென்று பாலைச் சொரிவது கண்டு அதிசயத்து, அந்த இடத்தைத் தோண்டச் செய்தார். அப்போது அவருக்குக் கிடைத்தது அதிசயக்கத்தக்க முருகப்பெருமான் திருமேனி.
அச்சிலையின் இடுப்புக்குக் கீழே, சிற்பி அரைகுறையாக வேலைப்பாடுகள் செய்திருந்தது கண்டு, அதனை முழுமையாக்கிட பண்ணையார் கருதி, சிற்பி ஒருவரை வரவழைத்தார். உளிகொண்டு சிலையைச் செதுக்கிட முற்பட்டபோது, குருதி பீறிட்டதால், உடனே பணியைப் பாதியில் நிறுத்திவிட்டார். மேற்கொண்டு ஏதும் செய்து தெய்வ அபசாரத்துக்கு உள்ளாகக் கூடாதெனக் கருதி, அந்தச் சிலையை அப்படியே அருகில் உள்ள குன்றின் மீது பிரதிஷ்டை செய்தார். அங்கேயே அழகிய திருக்கோயிலும் உருவானது. இன்றும் தண்டாயுதபாணியாக நிற்கும் முருகனின் அருட்கோலத்தை, திருமஞ்சனம் செய்கிற போது உற்று நோக்கினால் இடுப்புக்குக் கீழே சிலையின் வேலைப்பாடுகள் முழுமை பெறாதிருப்பதைக் காணலாம்.
பதினெண் சித்தர்களின் ஒருவர் புண் நாக்குச் சித்தர். "பொய் சொன்ன நாக்கு புண் நாக்கு' என்று எப்போதும் உபதேசித்தவர் அவர். நாக்கினைப் பின் பக்கமாக மடித்து அருள்வாக்குக் கூறிவந்த அவரை மக்கள் "பின்}நாக்குச் சித்தர்' என்றே அழைக்கத் தொடங்கினர். இவருக்கு பிண்ணாக்கீசர், பிண்ணாக்குச் சித்தர் என்ற பெயர்களும் உண்டு. அவர் தவமிருந்த குகை சென்னிமலையில் உள்ளது. அவர் முக்தி பெற்ற தலமும் இதுவே.
சந்நிதித் தெருவின் முகப்பில் இரண்டு யானைகள் கொண்ட இந்திர விநாயகர் கோயில் உள்ளது. அதற்கு மேற்கே படிக்கட்டு
களுடன் கூடிய தெப்பக்குளம் உள்ளது. இது மார்க்கண்டேய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒரே வரிசையில் கடம்பவனேசுவரர், கந்தவேல், இடும்பன் சந்நிதிகள், அதனையடுத்து மேலே மண்டபத்தில் வள்ளியம்மன் பாதம். அதனையும் கடந்து சென்றால் முருகப் பெருமானின் நவவீரர்களில் ஒருவரான "முத்துக்குமார சரவணன்' சந்நிதி உள்ளது.
கோயிலுக்கு மேலே ஆற்றுமலை விநாயகர் உள்ளார். இவரை ஆதி விநாயகர், ஆத்தி விநாயகர் என்றும் அழைப்பர். இக்கோயிலுக்கு மேலே "துரட்டி மரம்' உள்ளது. தீவினைகளைத் துரத்தியடிக்குமாம் இந்த மரம். அதனால் இந்தப் பெயர் வந்ததாம்.
உள் சுற்றின் தென்பகுதியில் இமய வல்லியுடன் கூடிய மார்க்கண்டேசுவரர், கன்னிமூலையில் விநாயகர், வடக்குப் பகுதியில் விசாலாட்சியுடன் காசிவிசுவநாதர் சந்நிதி. நடுநாயகமாக, சென்னிமலையாண்டவரின் திருச்சந்நிதி உள்ளது. சிரகிரி வேலவன் சகல சிக்கல்களையும் தீர்க்கும் பெரும் வரப்பிரசாதி. முருகப் பெருமானையே மணந்திட வேண்டும் என்று கடும் தவம் மேற்கொண்டு அழகனின் திருவருள் பெற்ற அமிருதவல்லி, சுந்தரவல்லி ஆகியோர்
வள்ளி}தெய்வானையாக சிலை வடிவில் உள்ளனர். ஒரே கற்சிலையாக இருவரும் ஒரே பீடத்தில் இருபுறம் நிற்க, நடுவில் கீழே ஒரு சிவலிங்கத் திருமேனியும் உள்ளது.
சென்னி ஆண்டவர் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் முருகப்பெருமானிடம் படிக்காசு பெற்றார்.
தங்கள் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளைத் தொடங்கி சென்னி ஆண்டவரிடம் உத்தரவு பெறுவது இப்பகுதியில் தொன்றுதொட்டு வரும் பழக்க
வழக்கமாகும். பாலன் தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசத்தில் "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என அழைத்து, அந்நூலை இங்கு அரங்கேற்றினார். செங்கத்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி போன்ற அருளாளர்கள் வாழ்ந்து முக்தியடைந்த புண்ணிய தலம். மாட்டுவண்டி மலையேறிய அதிசயம். எருதுகள் மூலம் தினசரி படிகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்வது போன்ற அதிசயங்கள் அதிகமாகக் கண்டுள்ள தலம்.
இக்கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா ஜனவரி 24}ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதில் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 1}ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல், பிப்ரவரி 5}ஆம் தேதி காலை வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு மஹா அபிஷேகம், இரவு அருள்மிகு நடராஜப் பெருமானும், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம்}வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சியும் நடைபெற இருக்கிறது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னிமலைக்கு அதிகளவில் பேருந்துகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.