இராக்கில் பயங்கரவாத தாக்குதல்: 22 பேர் சாவு
இராக்கில் திங்கள்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் சாவு எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
இராக்கில் திங்கள்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் சாவு எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 13 நகரங்களில் மொத்தம் 15 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், வெடுகுண்டு தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.
இராக்கில் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் போராடி வருகின்றனர். அரசை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை குறிவைத்தும், ஷியா பிரிவு யாத்திரிகர்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிரான கலகக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலையான சிரியா மற்றும் ஜோர்டான் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை தடை ஏற்படுத்தினர். இதையடுத்து வன்முறை ஏற்பட்டது. வெடிகுண்டு தாக்குதலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன.
Advertisement
Advertisement
இந்த சமபவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை முதலில் 12-ஆக இருந்தது. 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
தெற்கு பாக்தாத் நகரமான முஸ்சாய்பில் மூன்று வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இதில் 3 பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
தியாலா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில் 10 ஷியா பிரிவு முஸ்லிம் யாத்திரிகர்கள் உள்பட 19 பேர் காயமடைந்தனர். வடக்கு பாக்தாத் நகரமான கிர்குக்கில் சக்திவாய்ந்த குண்டை செயலிழக்கச் செய்தபோது, அது வெடித்ததில் 3 போலீஸôர் உயிரிழந்தனர்; 4 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு பாக்தாத்தில் மாகாண ஆளுநர் வருகைபுரிய இருந்த அரசு அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் குண்டு வெடித்து, 2 பேர் பலியாகினர். பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதல்களில் மொத்தம் 22 பேர் பலியாகியுள்ளனர்.