உலகம்

அகதிகளை அரவணையுங்கள்!

"ஐ.எஸ் (இஸ்லாமிய தேசம்) போன்ற பயங்கரவாத இயக்கங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நான் சொல்ல மாட்டேன்.

எஸ். ராஜாராம்

"ஐ.எஸ் (இஸ்லாமிய தேசம்) போன்ற பயங்கரவாத இயக்கங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அவர்களை இஸ்லாமியர்கள் என ஒப்புக்கொண்டு, அவர்களுக்கு சட்டப்பூர்வ தன்மையை நான் வழங்க விரும்பவில்லை' என அண்மையில் சொன்னார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இதனால், அவர் சில விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பிறகு, சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் முஸ்லிம்கள், ஆனால், அவர்கள் (ஐ.எஸ்) யார் என்று தெரியவில்லை. எங்களது நம்பிக்கைக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' எனச் சொன்னார் ஜோர்டான் மன்னர் அப்துல்லா.

தங்களது கொடூரத்தனமான செயல்பாடுகளால் உலகமே வெறுக்கும், அஞ்சும் ஓர் இயக்கமாக மாறியுள்ளது ஐ.எஸ். இராக், சிரியாவில் இந்த இயக்கம் ஆதிக்கம் செலுத்தும், தனது ஆளுகைக்குள்பட்ட பகுதியாகப் பிரகடனம் செய்துள்ள இடங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு எதிரான இந்த மனித உரிமை மீறல் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, 2014ஆம் ஆண்டை "மனிதப் பேரழிவு ஆண்டு' எனக் கூறியுள்ளது லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு. இந்த ஒரே ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 5 கோடி பேர் வீடு, உடைமைகளை இழந்து அகதிகளாகியுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.

அரசுப் படை வீசும் குண்டுகளில் தப்பினால், பயங்கரவாத இயக்கங்களின் துப்பாக்கிகளுக்கு இரையாகிறார்கள் அப்பாவி மக்கள். குறிப்பாக, சிரியா, இராக், நைஜீரியாவில் நிலைமை மிக மோசம். சிரியா, இராக்கில் ஐ.எஸ்., நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத இயக்கங்கள் மக்களைக் கொன்று குவிக்கின்றன. பணத்துக்காக ஆள்கடத்தல், பிணைக் கைதிகளின் தலையை வெட்டுவது, உயிரோடு எரிப்பது, பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது என இவற்றின் கொடூரங்களுக்கும் எல்லையே இல்லாமல் போய்விட்டது.

சிரியாவில் 2011இல் தொடங்கிய உள்நாட்டுச் சண்டை காரணமாக இதுவரை 1,90,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா அமைப்பு தெரிவித்துள்ளது. 1.10 கோடி பேர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். 76 லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர். 40 லட்சம் பேர் நாட்டைவிட்டே அகதிகளாக வெளியேறிவிட்டனர்.

திணறும் துருக்கி, லெபனான்

சிரியாவில் இருந்து வெளியேறும் மக்களில் பெரும்பாலானோர் தஞ்சமடைவது அண்டை நாடான துருக்கியிலும், லெபனானிலும்தான். துருக்கியில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 16 லட்சம் பேர் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். இதன்மூலம் உலகிலேயே அதிக அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாடாக துருக்கி உள்ளது. அதேபோல லெபனானில் கடந்த 4 ஆண்டுகளில் 15 லட்சம் சிரியர்கள் தஞ்சமடைந்துள்ளனர். லெபனானின் மக்கள் தொகையே 40 லட்சம்தான். அகதிகளுக்கு இடம் கொடுத்ததன் மூலம் அந்நாட்டின் மக்கள்தொகை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. "உணவுப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை, உள்கட்டமைப்புக் குறைபாடு என ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ள துருக்கி, லெபனான், ஜோர்டான் உள்ளிட்ட சிறிய நாடுகள், இந்த அகதிகளையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன. இதன் சுமையை பெரிய நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐ.நா. சபையின் அகதிகள் ஆணையர் ஆன்டனியோ கட்டரர்ஸ்.

"சிரியா அகதிகளுக்காக துருக்கி இதுவரை 600 கோடி டாலர் செலவிட்டுள்ளது. ஆனால், அதற்கு உதவித்தொகையாக உலக நாடுகள் இதுவரை அளித்துள்ள தொகை 30 கோடி டாலர் மட்டுமே. எனவே, சிரிய அகதிகளுக்காக உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும்' என துருக்கியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

துருக்கியில் உள்ள 16 லட்சம் சிரிய அகதிகளில் 2.29 லட்சம் பேர்தான் முகாம்களில் தங்கியுள்ளனர். மற்றவர்கள் நிலைமை மிகப்பரிதாபமானது. இருக்க இடமின்றி, போதிய உணவின்றி மிகக்கடினமாக வாழ்க்கையை நகர்த்தி வருவதாகத் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

வாளாவிருக்கும் வல்லரசுகள்

சிரியா, இராக், நைஜீரியாவில் ஐ.எஸ்., போகோ ஹராம் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மக்களுக்கு எதிராக நடத்தும் தாக்குதலைத் தடுக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தவறிவிட்டதாகவும், தங்களது வீட்டோ அதிகாரத்தை சுய அரசியல் லாபத்துக்காகத்தான் இந்த நாடுகள் பயன்படுத்துகின்றன எனவும் ஆம்னெஸ்ட் இன்டர்நேஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிரியாவில் உள்நாட்டுச் சண்டை தொடங்கியதில் இருந்து இதுவரையிலான காலகட்டத்தில் சர்வதேச தலையீட்டை இருமுறை ரஷியாவும், சீனாவும் வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்துள்ளன. லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட பிறகு, இப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் தாக்குதல்கூட ஒரு வகையில் காலம் கடந்தது என்றே கூறலாம். சிரியாவில் இருந்து அகதிகளாக வெளியேறியவர்களில் 3.80 லட்சம் பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை அடையாளம் கண்டறிந்தும், இதுவரை 79 ஆயிரம் பேர்தான் இந்த வல்லரசுகளால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரியாவில் போர் ஆரம்பித்த 4 ஆண்டுகளில், அந்நாட்டைச் சேர்ந்த 524 பேரை மட்டுமே அகதிகளாக அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு முதல் மேலும் சில ஆயிரம் பேரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. அதேவேளையில், ஐரோப்பாவையும் தாண்டி புனிதப் போரை விரிவுபடுத்துவோம் என சபதம் செய்துள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள், அகதிகள் என்ற பெயரில் சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்துவிடக்கூடும் என்கிற அச்சமும் அமெரிக்காவுக்கு உள்ளது. "இராக்கில் அமெரிக்கப் படைகள் பல ஆண்டுகளாக இருந்தன. அதனால், அங்குள்ள மக்கள் குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரிக்க முடிந்தது. ஆனால், சிரியாவை பொருத்தவரை, அகதிகளாக வர விருப்பம் தெரிவித்து விண்ணப்பிப்போரின் விவரங்களைச் சரிவர சேகரிக்க முடியவில்லை' எனத் தயக்கம் தெரிவிக்கிறது அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ.

சிரியாவில் இருந்து வெளியேறியவர்களில் 38 லட்சம் பேர் துருக்கி, லெபனான், ஜோர்டான், இராக், எகிப்து ஆகிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். மீதி 1.7 சதவீதம் பேருக்கே உலகின் பிற நாடுகள் அடைக்கலம் அளித்துள்ளன என்பது வேதனைக்குரிய விஷயம். மிகப்பெரிய அகதிகள் பிரச்னையை சந்தித்து வருகிறது உலகம். உலக நாடுகளின் செயல்பாடுகளில் வேகம் தேவை என்பதே ஆம்னெஸ்டி மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்ப்பும்.


போகோ ஹராம்

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கம். முகமது யூசுப் என்பவரால் 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் தற்போதைய தலைவர் அபுபக்கர். இந்த இயக்கத்துக்கு அல்காய்தா, ஐ.எஸ். ஆகிய இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அரசுப் படைக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் இந்த இயக்கத்தினர், அப்பாவி மக்களைக் கடத்திக் கொல்வது, படையில் சேர்ப்பது, கடத்தப்படும் இளம்பெண்களை பயங்கரவாதிகளுக்கு திருமணம் செய்வது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுகின்றனர். 2014ஆம் ஆண்டு மட்டும் போகோ ஹராம், அரசுப் படையினருக்கு இடையிலான சண்டை நடைபெறும் பகுதியிலிருந்து 15 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அச்சுறுத்தும் ஐ.எஸ்.

உலகையே அச்சுறுத்தும் இயக்கமாக வளர்ந்துள்ள ஐ.எஸ்., இராக்கில் அல்-காய்தா அமைப்பிலிருந்து பிரிந்து, ஷன்னி பிரிவைச் சேர்ந்த பல்வேறு குழுக்களுடன் இணைந்து, 2006ஆம் ஆண்டு "இராக்கின் இஸ்லாமிய தேசம்' என தன்னை பிரகடனம் செய்தது. அபுபக்கர் அல்-பாக்தாதி என்பவர் தலைமையில் செயல்படும் இந்த இயக்கம், சிரிய உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்டில் சிரியாவுக்குள் ஊடுருவியது. இன்று இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல், சிரியாவின் முக்கிய நகரமான அல்-ரக்கா உள்ளிட்ட பல நகரங்கள் ஐ.எஸ். வசம். முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்களையும் கைப்பற்றியுள்ள இந்த இயக்கம், சட்டவிரோத எண்ணெய் விற்பனை, ஆள்களைக் கடத்தி பிணைத் தொகை பெறுதல் உள்ளிட்ட வழிகளில் நிதி திரட்டி, தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இராக் ராணுவத்துக்கு அமெரிக்கா அளித்த பல்வேறு நவீன ஆயுதங்களையும், வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தையும் கொள்ளையடித்து ஆயுத பலம் மட்டுமன்றி, செல்வச் செழிப்பான பயங்கரவாத இயக்கமாகவும் உருமாறியுள்ளது. இராக், சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தில் 21,000 பேர் முதல் 31 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என, அமெரிக்காவின் சிஐஏ கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT