தான் ஒரு முறை பாகிஸ்தான் பயணம் மேற்கொண்ட போது, அதற்கு அமெரிக்கா நிதியுதவி செய்திருந்ததாக பயங்கரவாதி டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பையில், கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம், குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
காணொலி கட்சி மூலமாக அமெரிக்காவில் இருக்கும் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம், புது தில்லியில் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
இன்று நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின் போது 55 வயதாகும் டேவிட் ஹேட்லி அளித்த வாக்குமூலத்தில், அமெரிக்காவின் போதைப் பொருள் ஒழிப்புக் கழகம் எனது பாகிஸ்தான் பயணத்துக்கு நிதியுதவி வழங்கியது. அமெரிக்க போதைப் பொருள் ஒழிப்புக் கழக அதிகாரிகளுடன் நான் தொடர்பில் இருந்தேன். ஆனால், 1988 முதல் 1998ம் ஆண்டு வரை போதைப் பொருள் ஒழிப்புக் கழகத்துக்கு தகவல்களை அளித்தேன் அல்லது அவர்களுக்க உதவியாக செயல்பட்டேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹேட்லி, மும்பைத் தாக்கதல் வழக்கில் அப்ரூவராக மாறியுள்ளார்.
இவர் எல்-இ-டி பயங்கரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் டேவிட் ஹேட்லி. நான் எப்போதுமே எல்இடியிடம் இருந்து பணம் பெற்றதில்லை. முற்றிலும் தவறானது. நான் பல முறை எல்இடிக்கு நிதியுதவி செய்துள்ளேன். அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த காலக்கட்டத்தில் 60 முதல் 70 லட்சம் வரை நான் நிதியுதவி வழங்கியுள்ளேன். எனது கடைசி நன்கொடை 2006ம் ஆண்டு கொடுக்கப்பட்டது என்று ஹேட்லி கூறியுள்ளார்.
இந்த நிதியுதவிகள் அனைத்தும், எல்இடி அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்குத்தானே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட சதிச் செயலுக்கும் என்று கொடுக்கப்படவில்லை என்றும் ஹேட்லி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.