இந்தியா-பிரிட்டன் இடையேயான உறவில், பிரிட்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா கூறினார்.
பிரிட்டனில் தொழில் துறையில் முக்கியப் பங்காற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மூவரை கெளரவிக்கும் நிகழ்ச்சி, லண்டனில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா மேலும் பேசியதாவது:
பிரிட்டனில் முதலீடு செய்யும் மூன்றாவது மிகப்பெரிய நாடாகவும், பிரிட்டனில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது.
பிரிட்டனின் மொத்த மக்கள்தொகையில் இந்திய சமூகத்தினர் 2 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கு அவர்கள்
பங்களிப்பு செலுத்துகிறார்கள்.
அதாவது, இங்குள்ள இந்திய சமூகத்தினர் 15 லட்சம் பேர், நாட்டின் ஆக்கப்பூர்வ வளர்ச்சியிலும், இந்தியா-பிரிட்டன் இடையேயான நல்லுறவைப் பேணுவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றனர். அதுமட்டுமின்றி பிரிட்டனின் அரசியல் களத்திலும் அவர்கள் கோலோச்சுகின்றனர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் டாக்டர் ராமி ரேஞ்சர், ராடிஸன் ஹோட்டல் அதிபர் அதுல் பாட்டக், "இந்தியா லிங் இண்டர்நேஷனல்' பத்திரிகையின் ஆசிரியர் கிருஷண் ராலெய்க் ஆகிய மூவரும் கெளரவிக்கப்ட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.