உலகம்

செய்தி நிறுவனப் பணிக்கு திரும்பினார் டிரம்ப் ஆலோசகர்

DIN

அதிபரின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்ட ஸ்டீபன் பேனன் மீண்டும் தனது பழைய செய்தி நிறுவனப் பணிக்குத் திரும்பினார்.

பிரைட்பார்ட் நியூஸ் அமைப்பின் செயல் தலைவராக ஸ்டீவன் பேனன் மீண்டும் பொறுப்பேற்றதாக அந்தச் செய்தி நிறுவனம் அறிவித்தது. தீவிர வலதுசாரியைச் சேர்ந்த ஸ்டீபன் பேனன், அதிபர் டிரம்ப்பின் பல அரசியல் நிலைப்பாடுகளின் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, வீக்லி ஸ்டாண்டர்ட் வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிபரின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து தான் நீக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அவர் கூறியது: ஆக. 14-ஆம் தேதி முதல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுவேன் என்று ஆக. 7 -இல் நான் அதிபருக்குத் தெரிவித்து விட்டேன். கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன் ஆக. 14 -ஆம் தேதி பிரசாரக் குழு தலைவராகப் பொறுப்பேற்றேன். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு ஆலோசகராகப் பொறுப்பு வகித்து வந்தேன். அதிபருடன் ஓராண்டு செயலாற்றிய நிலையில் இப்போது விலகியுள்ளேன்.
இனி எனது கருத்துகளை சுதந்திரமாகத் தெரிவிப்பேன். அரசுப் பொறுப்புகள் என்னைக் கட்டுப்படுத்தாது. இனிமேல்தான் நான் முழு வீச்சில் செயல்படுவேன். எனது ஆயுதங்களை முழுமையாகப் பயன்படுத்தி இந்த நாட்டின் எதிரிகளைத் தோலுரித்துக் காட்டுவேன். தேசியவாத சக்திகள் இனிமேல்தான் வலுப்பெறும். டிரம்ப் அரசில் இனி மிதவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதிபர் தனது தீவிர நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொள்ள நேரிடும் என்றார் அவர்.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் ஆரம்பகட்டத்தில் குடியரசுக் கட்சிக்குப் பரவலான ஆதரவு பெற்ற வேட்பாளர் இல்லாததால், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன் சுலபமாக வெற்றி பெறுவார் என்று பொதுவாகக் கருதப்பட்டது. அந்த சமயத்தில் குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்தார். அவரது பிரசாரக் குழுத் தலைவராக செய்தி நிறுவனத் தலைவரான ஸ்டீவன் பேனன் பொறுப்பேற்று, தீவிர வலதுசாரி வாக்காளர்களை டிரம்ப்புக்கு ஆதரவாகச் சாய வைத்ததில் முக்கியப் பங்காற்றினார். இந்நிலையில், ஸ்டீவன் பேனனின் விலகல் அல்லது பதவி நீக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக டிரம்ப்பின் அரசியல் எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT