லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல்: 7 பேர் பலி
பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாகனத்தால் மோதியும், கத்தியால் குத்தியும் 3 பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாகனத்தால் மோதியும், கத்தியால் குத்தியும் 3 பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.
எட்டு நிமிடங்களுக்கு நீடித்த இந்தத் தாக்குதல், 3 பயங்கரவாதிகளும் லண்டன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பிரிட்டனில் வரும் 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
லண்டன் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான லண்டன் பாலம், பரோ சந்தை ஆகியவற்றில் 3 நபர்கள் சனிக்கிழமை இரவு தாக்குதல் நிகழ்த்தினர்.
முதலில், லண்டன் பாலத்தின் மீது அதிவேகமாக வந்த வெள்ளை நிற வேன் ஒன்று, பாதையைவிட்டு விலகி நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த வேனில் இருந்த 3 பேர் அருகிலுள்ள புகழ்பெற்ற பரோ சந்தைப் பகுதிக்கு 10 அங்குல நீளம் கொண்ட கத்தியுடன் சென்று பொதுமக்கள் மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.
உணவகங்களில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீதும் அந்த நபர்கள் கத்தியால் தாக்கியுள்ளனர்.
தகவல் கிடைத்ததும் 8 நிமிடங்களில் அந்த இடத்தை அடைந்த துப்பாக்கி ஏந்திய போலீஸார், தாக்குதல் நிகழ்த்திய 3 பேரையும் சுட்டுக் கொன்றனர்.
3 நபர்களும் நிகழ்த்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த 48 பேரும் லண்டன் முழுவதிலும் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னும் ஏராளமானோர் லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்றதாகவும் லண்டன் அவசரகால ஊர்தி சேவைத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
லண்டன் போக்குவரத்து போலீஸார் ஒருவருக்கு முகத்திலும், காலிலும் கத்திக்குத்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலி வெடிகுண்டு அங்கி: தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் வெடிகுண்டு அங்கியைப் போன்ற ஆடைகளை அணிந்திருந்தனர். ஆனால், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நிகழ்த்தப்பட்ட சோதனையில் அவை போலியான வெடிகுண்டு அங்கிகள் என்பது தெரியவந்ததாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் மார்க் ரெüலி தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதல் பயங்கரவாதச் செயலாக இருப்பதற்கான வாய்ப்புகளே உள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.
12 பேர் கைது: இந்தத் தாக்குதல் தொடர்பாக, கிழக்கு லண்டனின் "பார்க்கிங்' எனும் பகுதியில் 12 பேரைக் கைது செய்துள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில், அமெரிக்க பாப் பாடகி ஆரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற பிரபல உள்ளரங்கில் சல்மான் அபேதி என்ற பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை கடந்த மாதம் 22-ஆம் தேதி வெடிக்கச் செய்தார். இதில், 22 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.
மேலும், கடந்த மார்ச் 22-ஆம் தேதி, லண்டனின் வென்ஸ்மின்ஸ்டர் பாலத்தில் வேகமாக காரை ஓட்டி வந்த காலித் மசூத் என்பவர், பாதசாரிகள் மீது மோதச் செய்தார். இதில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், காரிலிருந்து இறங்கி, அங்கிருந்த காவலர் ஒருவரையும் காலித் மசூத் கத்தியால் குத்திக் கொன்றார்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றாலும், அந்தப் பயங்கரவாத அமைப்புக்கும், காலித் மசூதுக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை எனவும், அது அவர் தன்னிச்சையாக நிகழ்த்திய மத பயங்கரவாதத் தாக்குதலாகத்தான் இருக்கும் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், வென்ஸ்மின்ஸ்டர் பாலத் தாக்குதலைப் போலவே லண்டன் பாலத்திலும் வாகனத்தைக் கொண்டும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரோ சந்தையில தாக்குதல் நிகழ்த்திய நபர்கள், ""அல்லாவுக்காக...'' என்று கோஷமெழுப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை மேற்கோள் காட்டி, பிபிசி ஊடகம் தெரிவித்தது.
பிரிட்டன் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலும், இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலால் இந்தியர் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து தகவல் தெரிவிக்குமாறு பிரிட்டனுக்கான இந்தியத் தூதரகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் பிரசாரம் ஒத்திவைப்பு?: இந்தத் தாக்குதலையடுத்து, தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி வைக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.
எனினும், திட்டமிட்டபடி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் மருத்துவ மீட்புக் குழுவினர்.
தலைவர்கள் கண்டனம்
பிரிட்டனில் தற்போது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் விளைவுகள் ஆகும். அந்த தீய சித்தாந்தத்தை நாட்டிலிருந்து விரட்டுவோம். அந்த சித்தாந்தம் இஸ்லாமிய சித்தாந்தத்துக்கும், உண்மைக்கும் நேர்மாறானது.
- தெரசா மே, பிரிட்டன் பிரதமர்
தாக்குதலைத் தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்ட லண்டன் போலீஸாரின் தீரச் செயலுக்கு எனது பாராட்டுகள். இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் அளிக்கும்.
-டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர்
அதிர்ச்சியையும், துக்கத்தையும் மட்டுமன்றி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் உறுதிப்பாட்டையும் பிரிட்டனுடன் ஜெர்மனி பகிர்ந்துகொள்கிறது.
- ஏஞ்சலா மெர்க்கெல், ஜெர்மனி பிரதமர்
லண்டனில் நடைபெற்ற தாக்குதல் அதிர்ச்சியும், தளர்வும் அளிப்பதாக உள்ளது. கண்டனத்துக்குரிய இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
- நரேந்திர மோடி, பிரதமர்
லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
- சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்
பயங்கரவாதம் என்பது உலகளாவிய பிரச்னையாகியிருக்கிறது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து அந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம்
அடுத்த பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படுவது உறுதி என்பதை உணர்த்தும் உச்சக்கட்ட எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டும், இந்த கொடூரமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
-ஜெரமி கார்பின், பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர்
லண்டனிலிருந்து வந்துள்ள தாக்குதல் செய்தி வேதனையளிக்கிறது. எந்தச் சூழலிலும் நாங்கள் பிரிட்டனுக்கு பக்கபலமாக இருப்போம்.
-ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமர்
அப்பாவி லண்டன்வாசிகள் மீது வேண்டுமென்ற நடத்தப்பட்ட, கோழைத்தனமான தாக்குதல்.
- சாதிக் கான், லண்டன் மேயர்