உலகம்

கூகுளுக்கு ரூ.17,000 கோடி அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன்

DIN

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் நம்பிக்கைக்கு எதிரான வகையில் செயல்பட்டதற்காக அந்நிறுவனத்துக்கு, ஐரோப்பிய யூனியன் 240 கோடி யூரோவை ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடி) அபராதமாக விதித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய சந்தைப் போட்டி ஆணையத்தின் தலைவர் மார்கரெட் வெஸ்டேஜர் கூறியதாவது:
கூகுள்தான் உலகின் மிக பிரபலமான தேடுபொறியாக உள்ளது. ஆனால், அதில் தனது சொந்த ஷாப்பிங் சேவைகளை முன்னிலைப்படுத்துவதற்கே கூகுள் நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.
கூகுளின் இந்த எதேச்சாதிகாரப் போக்கு, ஐரோப்பிய யூனியனின் ஏகபோகத் தடுப்பு விதிமுறைகளின் கீழ் சட்டவிரோதமான செயலாகும்.
கூகுள் நிறுவனம் தொடர்ந்து தன்னையே முன்னிலைப்படுத்தி செயல்பட்டதன் மூலம் இதர நிறுவனங்கள் சந்தையில் போட்டியிட சமமான வாய்ப்புகளை வழங்கவில்லை. மேலும், இதர நிறுவனங்களின் சிறப்பியல்புகளையும் மற்றும் அவற்றின் கண்டுபிடிப்புகளையும் சந்தையில் முன்னிலைப்படுத்தவிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளது.
இதன் மூலம், ஐரோப்பிய நுகர்வோர்கள் உண்மையான சேவைகளைத் தேர்ந்தெடுப்பதையும், கண்டுபிடிப்பின் முழு பலன்கள் அவர்களை சென்றடைவதையும் கூகுள் நிறுவனம் தடுத்துள்ளது.
கூகுள் நிறுவன தேடுபொறியில் அதன் சொந்த ஆன்லைன் சேவை, கூகுள் ஷாப்பிங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதால், டிரிப்அட்வைஸர், எக்ஸ்பீடியா போன்ற நிறுவனங்கள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் நம்பிக்கைக்கு மாறான வகையில் செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்துக்கு 240 கோடி யூரோ அபராதமாக விதிக்கப்படுகிறது.
மேலும், கூகுள் ஷாப்பிங்கிற்கான வர்த்தக மாதிரிகளை ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் மாற்றியமைக்க கூகுள் நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, ஐரோப்பிய சந்தையில் ஏகபோக தனியுரிமையை நிலைநாட்டும் வகையில் செயல்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் நிறுவனத்துக்கு 106 கோடி டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) அபராதம் விதிக்கப்பட்டதே அதிகபட்ச அளவாகக் கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த வரலாற்று சாதனையை கூகுள் நிறுவனம் முறியடித்துள்ளது.
இருப்பினும், கூகுளுக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதத் தொகை ஐரோப்பிய யூனியன் மூலம் அதற்கு கிடைக்கும் வருவாயுடன் (800 கோடி யூரோ/மொத்த வருவாயில் 10 சதவீதம்) ஒப்பிடுகையில் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியன் சந்தையில் நியாயமான போட்டியை முடக்கும் விதமாக செயல்பட்டதற்காக, அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், அமேஸான், மெக்டனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் ஆகியவற்றின் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT