உலகம்

சீனாவின் பொருளாதார வழித்தடத் திட்டம்: காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் கவலையை ஆதரிக்கிறோம்: இலங்கை

DIN

சீனாவின் 'ஒரே மண்டலம் - ஒரே பாதை' (ஒன் பெல்ட் - ஒன் ரோடு) என்ற பொருளாதார வழித்தடத் திட்ட விவகாரத்தில் காஷ்மீர் தொடர்பாக இந்தியா கொண்டுள்ள கவலையை தாங்கள் ஆதரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இத்திட்டம் தொடர்பாக பெய்ஜிங்கில் சீனா நடத்திய 2 நாள் மாநாட்டில் இலங்கையும் பங்கேற்றது. இலங்கை சார்பில் அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சரத் அமுனுகாமாவும் அதில் கலந்து கொண்டனர்.
எனினும், இத்திட்டம் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் உள்ளடக்கியது என்பதால் இந்தியா மேற்கண்ட கருத்தரங்கைப் புறக்கணித்தது. இது தொடர்பாக இலங்கை அமைச்சர் சரத் அமானுகாமா, பெய்ஜிங்கில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
சீனாவின் 'ஒரே மண்டலம் - ஒரே பாதை' திட்டத்தில் இந்தியா மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்திய நலன்களை அசட்டை செய்வது போல் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
அத்திட்டப் பாதை கடந்து செல்லும் பகுதியானது சர்ச்சைக்குரியதாக இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும். எனினும், இந்த விவகாரத்தில் காஷ்மீர் சம்பந்தப்பட்டுள்ளதால் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவின் கவலைகளை இலங்கை ஆதரிக்கிறது.
வரலாற்றுக் காலத்தில் தொன்மையான பட்டுச்சாலை வழித்தடத்தில் இந்தியா, சீனா, இலங்கை ஆகியவை இணைந்திருந்தன. சீனாவைச் சேர்ந்த ஃபாஹியான் போன்ற புத்த மத அறிஞர்கள் இந்த வழியாகவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டனர். அதன் விளைவாகவே இலங்கையில் இருந்த புத்த மதம் தொடர்பான தொன்மையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சீன அதிபர் ஜீ ஜின்பிங், நாடுகளிடையே தொடர்பை வலியுறுத்தியுள்ளார். இந்தியா-சீனா-இலங்கை ஆகிய நாடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடர்பில் இணைந்திருந்தன.
சில விஷயங்களில் இந்த நாடுகளை அந்தத் தொடர்பானது இணைக்கும்.
பிராந்திய ரீதியிலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டால் அதன் பின், 'ஒரே மண்டலம் - ஒரே பாதை' முன்முயற்சித் திட்டத்தில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கும். சீனா உள்பட எந்த நாடும் எங்கள் நாட்டுத் துறைமுகத்தில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.
எங்கள் கடல் பகுதியில் தங்கள் நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவதற்கு சீனா விடுத்த வேண்டுகோள்களை நாங்கள் நிராகரித்ததாக ஊடகங்களில் வந்த செய்தி உண்மைதான். நாங்கள் அந்த அனுமதியை அளிக்கவில்லை என்று அமுனுகாமா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT