உலகம்

ஈரான் நிலநடுக்க பலி எண்ணிக்கை 530-ஆக அதிகரிப்பு: 2,000 கிராமங்கள், 7 நகரங்களில் பலத்த சேதம்

DIN

ஈரான், இராக் நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 530ஆக அதிகரித்தது. மேலும், காயமடைந்த 7,460-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இராக் நாட்டின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதியை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரான்-இராக் எல்லைப் பகுதியில் பூமிக்கடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரானின் மேற்கு மாகாணம் கெர்மான்ஷா முதல் அண்டை நாடான இராக்கின் குர்திஸ்தான் வரையில் கடுமையாக உணரப்பட்டது.இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து நாசமாகின. ஈரானில் மொத்தமுள்ள 31 மாகாணங்களில் 14 மாகாணங்கள் இந்த பூகம்பத்தால் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.
நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கெர்மான்ஷா நகரத்தை ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி பார்வையிட்டார். 
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிர்கதியான நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு தேவையான உணவு, குடிநீர், இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும் பணிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். 
நிலநடுக்கத்தால் புதிய கட்டடங்களுக்கு அதிக பாதிப்பில்லை என்றபோதிலும், பெரும்பாலான பழைய கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அதிகாரிகளின் தற்போதைய மதிப்பீட்டின்படி 12,000 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகியுள்ளதுடன், 15,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏழு நகரங்கள், 2,000 கிராமங்கள் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பல கிராமங்கள் வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். தலஹு மாகாணத்தில் பல கிராமங்கள் முற்றிலும் அழிந்து போயின. 
சர்போல்-ஏ-சஹப் நகரத்தில் மட்டும் நிலநடுக்கத்தால் 280 பேர் வரை உயிரிழந்தனர். 
வீடிழந்தவர்களை தங்க வைக்க 22,000 கூடாரங்களும், 52,000 போர்வைகளும், டன் கணக்கான உணவு மற்றும் குடிநீர் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
நிலநடுக்க பேரழிவை நினைவுகூறும் வகையில் ஈரான் அரசு செவ்வாய்க்கிழமையை துக்க தினமாக கடைப்பிடித்தது.
வெட்டவெளியில் 2ஆவது இரவு:
ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். 
இந்த நிலையில், பீதியின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் வீடுகளுக்கு திரும்ப மறுத்து இரண்டாவது நாளான திங்கள்கிழமை இரவுப் பொழுதையும் வீதிகளிலேயே கழித்தனர்.
இராக்கில் நிலநடுக்கத்துக்கு 7 பேர் பலியாகினர். மேலும் 535 பேர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT