உலகம்

பாகிஸ்தான்: நவாஸ் மகன்கள் மீதான விசாரணை ஒத்தி வைப்பு

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான ஊழல் வழக்கில் அவருடைய மகன்களைத் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று அறிவிப்பது குறித்த விசாரணையை புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
ஊழல் புகார் தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. அவர் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். அவர் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்கு தொடரும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாகிஸ்தானின் தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நவாஸ் மீது மூன்று வழக்குகள் தாக்கல் செய்தது. அதில் அவருடைய மகன்கள் ஹுசேன், ஹசன், மகள் மரியம், அவருடைய கணவர் முகமது சஃப்தர் ஆகியோர் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் ஹுசேன், ஹசன் தவிர பிறர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு நடந்துள்ளது. ஆனால் ஹுசேனும் ஹசனும் இதுவரை ஒரு முறை கூட நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர்கள் லண்டனில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த அக். 10-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. அவர்கள் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த கெடு சில நாட்கள் முன்பாகவே காலாவதியாகிவிட்டது. கெடு விதிக்கப்பட்ட காலத்துக்குள் ஹுசேன், ஹசன் நீதிமன்றத்தில் சரணடையவில்லை.
இந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணை செவ்வாய்க்கிழமை (நவ. 14) நீதிபதியின் முன்பாக வந்தது.
அப்போது தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர், ஹுசேன் ஷெரீஃப், ஹசன் ஷெரீஃப் ஆகியோரைத் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனினும், தனது முடிவு எதையும் தெரிவிக்காமல் நீதிபதி விசாரணையை புதன்கிழமைக்கு (நவ. 15) ஒத்தி வைப்பதாகத் தெரிவித்தார்.
ஹுசேன் ஷெரீஃபும், ஹசன் ஷெரீஃபும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தற்போது லண்டனில் உள்ளனர். அங்கு அவர்களது தாயார் குல்ஸும் தொண்டை புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை பெற்று, உடல் நிலை தேறி வருகிறார். அவருக்குத் துணையாக அவர்கள் அங்கு உள்ளனர்.
அவர்கள் இருவரும் பிரிட்டனிலும் துபையிலும் தொழில் நடத்தி வருகின்றனர். லண்டனில் குடியிருப்பு வாங்கியது, துபையில் நிறுவனம் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மகன்களின் வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஊதியம் பெற்றதை நவாஸ் ஷெரீஃப் மறைத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். எனினும் தான் கெளரவப் பதவி மட்டுமே வகித்ததாகவும் ஊதியம் எதுவும் பெறவில்லை என்றும் நவாஸ் ஷெரீஃப் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த விவரங்களை தனது தேர்தல் வேட்புமனுவில் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT