உலகம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: விக்ரமசிங்க கட்சி முடிவு

DIN

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக நீக்கப்பட்ட பிரதமர் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் நிறைவடைய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபட்சவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் காரணமாகவே, அதிபர் சிறீசேனா நாடாளுமன்றத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. மேலும், ஜனவரி 5-ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.  

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீரா செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

"நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் எடுத்த முடிவு சட்ட விரோதமானது என்று கூறி அதை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி அடுத்த வார தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது" என்றார். 

இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சிலர் தேர்தல் ஆணையர் மஹிந்தா தேஷபிரியாவை சந்தித்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தி, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தினர். 

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஜனதா விமுக்தி பெராமுனா கட்சிகளும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை வழக்கு தொடரப்போவதாக அக்கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, அதிபர் சிறீசேனா கடந்த மாதம் 26-ஆம் தேதி பிரதமர் விக்ரமசிங்கவை நீக்கி, புதிய பிரதமராக மஹிந்தா ராஜபட்சவை நியமித்தார். அன்று முதல் இலங்கையில் தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அவர் நேற்று நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT