உலகம்

கஷோகியின் உடல் கழிவு நீருடன் வெளியேற்றம்? துருக்கி நாளிதழ் அதிர்ச்சித் தகவல்

தினமணி

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், திரவத்தில் கரைக்கப்பட்டு, கழிவு நீருடன் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் "சாபா' நாளிதழ் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
 இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டதாகவும், பிறகு அது அமிலத்தில் கரைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.
 தற்போது புதிதாகக் கிடைத்துள்ள தகவலின்படி, அமிலத்தில் கரைக்கப்பட்ட கஷோகியின் உடல் கழிவு நீருடன் கலந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
 சவூதி துணைத் தூதரகத்தின் கழிவு மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் அமிலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
 எனவே, கஷோகியின் கரைக்கப்பட்ட உடல், அந்த கழிவுகளுடன் சேர்த்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
 சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார்.
 சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
 இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
 எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT