உலகம்

சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் சேர்ந்தார் ராஜபட்ச

தினமணி

இலங்கை அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியான இலங்கை மக்கள் கட்சியில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச இணைந்துள்ளார்.
 இலங்கை மக்கள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அக்கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, அந்தக் கட்சியில் ராஜபட்ச உறுப்பினராக சேர்ந்தார்.
 இலங்கை பிரதமராக ராஜபட்சவை அண்மையில் அதிபர் சிறீசேனா நியமித்தார். இருப்பினும், வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரா கட்சியின் அங்கமாக இல்லாமல் தனி அடையாளத்துடன் போட்டியிடும் வகையில், இலங்கை மக்கள் கட்சியில் ராஜபட்ச சேர்ந்துள்ளார். இதன்மூலம் சுதந்திரா கட்சியுடன் ராஜபட்சவுக்கு கடந்த 50 ஆண்டுகாலமாக இருந்த தொடர்பு முடிவுக்கு வந்துள்ளது.
 சுதந்திரா கட்சி கடந்த 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, அக்கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்தவர் ராஜபட்சவின் தந்தை டான் ஆல்வின் ராஜபட்ச. அன்று முதல் அக்கட்சியுடன் ராஜபட்சவுக்கு தொடர்பு இருந்தது. இதனிடையே, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்ச தோல்வியடைந்தார். சிறீசேனா அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சுதந்திரா கட்சியில் இருந்து ராஜபட்சவை சிறீசேனா ஓரங்கட்டினார். இதையடுத்து, ராஜபட்சவின் ஆதரவாளர்கள் இலங்கை மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
 இதனால் இலங்கையை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிறீசேனாவின் சுதந்திரா கட்சிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் கருத்து வேறுபாடு உருவாக தொடங்கியது. இதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு ராஜபட்சவை அப்பதவியில் சிறீசேனா கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி நியமித்தார்.
 ராஜபட்சவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தை முதலில் முடக்கிய சிறீசேனா, பின்னர் 14ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக அறிவித்தார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தை அவர் வெள்ளிக்கிழமை கலைத்தார். மேலும், இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறீசேனா அறிவித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT