உலகம்

இலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை   

DIN

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறீசேனா பிறப்பித்த உத்தரவிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 19ஆவது திருத்தத்தின்படி, அதிபரின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை நாடாளுமன்றம் மொத்தம் 5 ஆண்டு பதவிகாலம் கொண்டது. இதில் நான்கரை ஆண்டு பதவிகாலத்தை பூர்த்தி செய்யாத வரையில், நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவிகாலம் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் பதவிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய அதிபர் ராஜபட்ச தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் சிறீசேனா வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, சுதந்திரா கட்சியில் இருந்து ராஜபட்சவை சிறீசேனா ஓரங்கட்டினார். ரணிலின் கட்சியும், சிறீசேனா கட்சியும் கூட்டணி சேர்ந்து, இலங்கையில் ஆட்சியமைத்தன. ரணில் பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்சவின் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட இலங்கை மக்கள் கட்சி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனால் சிறீசேனாவுக்கும், ரணிலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு, ராஜபட்சவை சிறீசேனா திடீரென நியமித்தார். இதன்பின்னர் நாடாளுமன்றத்தை நவம்பர் மாதம் 16ஆம் தேதி வரை அவர் முடக்கி வைத்தார். 

இருப்பினும், உள்நாட்டில் எழுந்த நெருக்கடி, சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக, நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் தேதி கூட்டப்படுவதாக அறிவித்தார். அதேநேரத்தில், ராஜபட்சவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை அறிந்து, நாடாளுமன்றத்தை கடந்த 9ஆம் தேதி சிறீசேனா கலைத்தார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறீசேனா அறிவித்தார்.

அதனை அடுத்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் சிறீசேனாவுக்கு எதிராக பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம், இலங்கை தேர்தல் ஆணைய உறுப்பினரும் பேராசிரியருமான ரத்னஜீவன் ஹூலே உள்ளிட்டோர் சார்பில் 10 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்தது சட்டவிரோதமான நடவடிக்கை என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறீசேனா பிறப்பித்த உத்தரவிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது, அதிபர் சிறீசேனா பிறப்பித்த நாடாளுமன்றம் கலைப்பு உத்தரவிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.  அத்துடன் நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT