உலகம்

கஷோகி படுகொலை சவூதி இளவரசர் மீது சிஐஏ குற்றச்சாட்டு?

DIN


செய்தியாளர் கஷோகி படுகொலையில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்புள்ளது என, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் விசாரணை முடிவுகள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, சிஐஏ வட்டாரங்களை மேற்கொள் காட்டி, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டது தொடர்பாக சிஐஏ நடத்திய விசாரணையில், அந்தச் சம்பவத்துடன் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை புலனாய்வு அதிகாரிகள் தொடர்புபடுத்தியுள்ளனர்.
சவூதி அரசின் 15 அதிகாரிகள், அரசுக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் சென்றதாகவும், பிறகு துணைத் தூதரகத்துக்கு வந்திருந்த கஷோகியை அவர்கள் படுகொலை செய்ததாகவும் சிஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே, அந்தப் படுகொலை சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், கஷோகி படுகொலை தொடர்பாக சவூதியில் நடைபெற்று வந்த வழக்கில் 11 பேரைக் குற்றவாளிகளாக அந்த நாட்டு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படுகொலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பில்லை எனவும், சவூதி புலனாய்வு அமைப்பின் துணைத் தலைவர் அகமது அல்-அஸிரியும், கஷோகியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விமானம் மூலம் துருக்கி சென்ற குழுவின் தலைவரும்தான் கஷோகியைக் கொல்ல உத்தரவிட்டனர் என்றும் சவூதி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதற்கு நேர்மாறாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் விசாரணை முடிவுகள் தெரிவிப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி மறுப்பு


கஷோகி படுகொலை தொடர்பான சிஐஏ முடிவுகள் குறித்து வெளியான தகவலை சவூதி அரேபியா மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலுள்ள சவூதி தூதகரக செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா பேயெஷென் கூறியதாவது: செய்தியாளர் கஷோகி படுகொலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சிஐஏ தொடர்புபடுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்குப் புறம்பானதாகும். எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், இதுபோன்ற கற்பனைக் கதைகளை நாம் தொடர்ந்து கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT