உலகம்

அரசியல் கைதிகள் விவகாரம்: இலங்கை அரசுக்கு நிபந்தனை விதிக்க விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

தினமணி

இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைபட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவித்தால் மட்டுமே அந்நாட்டின் நிதி நிலை அறிக்கைக்கு ஆதரவளிப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறீசேனா அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் விக்னேஸ்வரன், இக்கோரிக்கையை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது முன்வைத்தார்.
 விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் இலங்கையில் அரசியல் கைதிகளாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு அந்நாட்டு அரசு செவிசாய்க்கவில்லை.
 தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டுமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அவசியம். இல்லையெனில், முன்னாள் அதிபர் ராஜபட்ச ஆதரவாளர்கள் பட்ஜெட்டுக்கு முட்டுக்கட்டை போடக் கூடிய சூழல் நிலவுகிறது.
 இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதுதொடர்பாக பேசிய விக்னேஸ்வரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணா உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, பிற கைதிகளை விடுப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை ஆதரிக்க வேண்டுமானால், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அரசிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் விக்னேஸ்வரன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர், கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்கள் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசுக்கு பல்வேறு விவகாரங்களில் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். மேலும், சிங்கள ஆட்சியாளர்களுடன் மென்மையான போக்கையும் அவர்கள் கடைப்பிடித்தனர்.
 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி வெளிப்படுத்திய விக்னேஸ்வரன், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டார். இந்தச் சூழலில், விரைவில் நடைபெறவுள்ள இலங்கை மாகாணத் தேர்தலில் விக்னேஸ்வரனை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT