முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தான்: காவல்துறை தலைவர் படுகொலை எதிரொலி: காந்தஹார் மாகாணத் தேர்தல் தள்ளிவைப்பு

ஆப்கனின் காந்தஹார் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் பிரபல காவல்துறை உயரதிகாரி

Updated On : 20 அக்டோபர், 2018 at 1:06 AM
தேர்தலையொட்டி, காந்தஹார் நகரில் வாகனங்களை சோதனையிடும் பாதுகாப்புப் படையினர்.
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:36 PM


ஆப்கனின் காந்தஹார் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் பிரபல காவல்துறை உயரதிகாரி உயிரிழந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த அந்த மாகாணத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிபர் அஷ்ரஃப் கனியின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காந்தஹாரில் நேட்டோ-ஆப்கன் படையினரின் கூட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அந்த சனிக்கிழமை (அக். 20) நடைபெறுவதாக இருந்த காந்தஹார் மாகாணத் தேர்தலை ஒரு வார காலத்துக்கு தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.
புதிய தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் பிறகு அறிவிக்கும் என்றார் அவர்.
தலிபான்களின் பிறப்பிடமான காந்தஹாரில், அமெரிக்க தலைமையிலான நேட்டோ மற்றும் ஆப்கன் படையினரின் கூட்டம் மாகாண ஆளுநர் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில் நேட்டோ படைத் தளபதி ஸ்காட் மில்லர், காந்தஹார் காவல்துறை தலைவர் அப்துல் ரஸீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பாதுகாப்பப் படையினரின் சீருடை அணிந்து அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த தலிபான் பயங்கரவாதி, அவர்களைக் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.
இதில், அப்துல் ரஸீக், காந்தஹார் மாகாண உளவுத் துறை தலைவர் மற்றும் ஒரு செய்தியாளர் உயிரிழந்தனர். நேட்டோ படைப் பிரிவுத் தளபதி ஸ்காட் மில்லர் காயமின்றி தப்பினார். இந்தத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்தனர்.
அதையடுத்து, காந்தஹார் மாகாணத் தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தஹாரில் 3 ஆண்டுகள் தாமதமாக சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த மாகாணத் தேர்தலில், வாக்குப் பதிவின்போது தாக்குதல் நடத்தவிருப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால், வாக்குப் பதிவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, வாக்குப் பதிவு மேலும் குறையும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில், தற்போது தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் சிம்ம சொப்பனம்!


ஏறத்தாழ 20 முயற்சிகளுக்குப் பிறகு காந்தஹார் காவல்துறை தலைவர் அப்துல் ரஸீக்கை (39) தலிபான் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.
தலிபான்களின் பிறப்பிடமான காந்தஹாரில், நாளொரு குண்டுவெடிப்பும், பொழுதொரு தாக்குதல்களுமாக இருந்து வந்த காலகட்டத்தில், அந்த மாகாண காவல்துறை தலைவராக கடந்த 2011-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் அப்துல் ரஸீக்.
ஆனால், அவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் தலிபான் பயங்கரவாதிகளை அவர் எதிர்கொண்ட விதம், ஆப்கன் மக்களிடையே வெகுவான பாராட்டைப் பெற்றுத் தந்தது.
பயங்கரவாதிகளை வெல்ல வேண்டுமானால், அவர்களது இரக்கமற்ற தன்மையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவரது உத்தி நல்ல பலனைத் தந்தது.
இருந்தாலும், அவரது கடுமையான அணுகுமுறையால் அப்பாவி மக்கள் படுகொலை, சட்ட விரோத கொலைகள், ஆள்களைக் கடத்திச் சென்று ரகசிய இடத்தில் சித்திரவதை செய்தல் போன்ற மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு அவர் உள்ளானார்.
போதை மருந்து கடத்தல், ஊழல் போன்ற புகார்களும் அவர் மீது இருந்தது.
இருந்தாலும், தலிபான்களே, அவரை எப்படியாவது கொன்றாக வேண்டும் என்று வைராக்கியம் கொள்ளும் அளவுக்கு தனது எதிரிகளிடமும், நண்பர்களிடமும் புகழ் பெற்று விளங்கினார் அவர்.
அவரால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்கள் அவரைக் கண்டு நடுங்கினாலும், நகர்புற ஆப்கானியர்கள் அவரை நாயகனாகவே கொண்டாடினார்கள்.
அதற்குக் காரணம், தலிபான் பயங்கரவாதிகளுக்கு அவர் கொடுத்து வந்த தலைவலிதான்.
அதுதான், ரஸீக்கை எப்படியாவது கொன்றே ஆக வேண்டும் என்று தலிபான் பயங்கரவாதிகள் கடுமையாக முயன்றதற்குக் காரணம்.
இத்தனை ஆண்டு கால முயற்சிகளுக்குப் பிறகு, தற்போது அப்துல் ரஸீக்கின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி தலிபான்கள் அவரை சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், தலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வெகு சில ஆப்கன் படைத் தலைவர்களில் அப்துல் ரஸீக்கும் ஒருவர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.