உலகம்

பிரெக்ஸிட் பற்றிய போரிஸ் ஜான்ஸன் கடிதம்: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி

DIN


பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தங்களுக்கு எழுதியுள்ள கடிதம் திருப்திகரமாக இல்லை என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் நடாஷா பெர்டாட் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் தொடர வேண்டிய உறவு குறித்த ஒப்பந்தம் தொடர்பாக அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்ஸன் எழுதியுள்ள கடிதம் திருப்திகரமாக இல்லை.
அந்தக் கடிதத்தில் அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு இடையே பிரெக்ஸிட்டுப் பிறகும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்வதற்கான ஒப்பந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், அதற்கு மாற்றாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதில் அவர் தெளிவுபடுத்தவில்லை.
அயர்லாந்துக்கும், வடக்கு அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக ஒருங்கிணைப்பைத் துண்டித்த பிறகு, அயர்லாந்து தீவில் வர்த்தக எல்லை வகுக்கப்படுவதை எப்படி தடுப்பது என்பது குறித்த விளக்கத்தையும் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அளிக்கவில்லை என்று நடாஷா பெர்டாட் தெரிவித்தார்.
முன்னதாக, ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்குக்கு பிரதமர் போரிஸ் ஜான்ஸன் எழுதி அனுப்பிய கடிதத்தில், அயர்லாந்து நாட்டுக்கும், தங்களது வடக்கு அயர்லாந்து பகுதிக்கும் இடையே பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பின்னர், அயர்லாந்து தீவில் பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்து பகுதிக்கும், தனி நாடாகத் திகழும் அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக எல்லை எழுப்பினால், அது அந்தப் பகுதியின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் இரு பகுதிகளுக்கும் இடையே வர்த்த ஒருங்கிணைப்பை குறிப்பிட்ட அளவுக்கு தொடர்வது என பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மே-யும், ஐரோப்பிய யூனியன் தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். எனினும், இது பிரிட்டனின் இறையாண்மையை பாதிக்கும் எனக் கூறி அந்த ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது.
அதையடுத்து தனது பதவியை தெரசா மே ராஜிநாமா செய்தார். அவருக்குப் பதிலாக போரிஸ் ஜான்ஸன் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், அவர் எழுதிய கடிதம் குறித்து ஐரோப்பிய யூனியன் இவ்வாறு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT