உலகம்

மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது

DIN

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் சயீது' விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
 இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான உறவைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றியதற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை, அபுதாபியில் அதிபர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நயன் வழங்கி கெளரவித்தார்.
 இதுகுறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
 ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள இந்த விருதினை பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். என்னைக் கெளரவப்படுத்தியதற்காக, ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 இந்த விருதை 130 கோடி இந்தியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
 இதற்கு முன், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்களுக்கு "ஆர்டர் ஆஃப் சயீது' விருது வழங்கப்பட்டுள்ளது.
 இந்த விருதை ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த ஏப்ரலில் அறிவித்தது.
 பிரதமர் மோடியின் பயணத்துக்கு முன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
 இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் கலாசாரம், மதம், பொருளாதார ரீதியிலான உறவுகளால் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. பிரதமர் மோடி கடந்த 2015-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் சென்றபோது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு அடுத்த உயரத்துக்குச் சென்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்தியாவின் 3-ஆவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.
 பஹ்ரைனில் பிரதமர் மோடி: இதனிடையே, தனது சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டமாக, பிரதமர் மோடி அபுதாபியில் இருந்து சனிக்கிழமை மாலை பஹ்ரைன் வந்தடைந்தார். அங்கு பஹ்ரைன் அரசர் ஹமாத் பின் ஐசா அல் கால்ஃபியாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு முன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் ஒருவர் பஹ்ரைனுக்கு வந்தது இதுவே முதல் முறை என்பதால் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
 இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் செல்கிறார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT