உலகம்

எல்லைச் சுவர் எழுப்ப அனுமதித்தால் சட்டவிரோத அகதிகளுக்கு சலுகை

DIN

மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அனுமதித்தால், உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட அகதிகள் நாடு கடத்தப்படுவதை நிறுத்திவைப்பதாக ஜனநாயகக் கட்சியினரிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
எல்லைச் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்வதில் அவருக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வருவதால் கடந்த 4 வாரங்களாக முக்கிய அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் டிரம்ப் இந்த யோசனையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும், டிரம்ப்பின் இந்த யோசனையை ஏற்பதற்கு ஜனநாயகக் கட்சியினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடையே ஆற்றிய உரையில் டிரம்ப் தெரிவித்ததாவது:
மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக பட்ஜெட்டில் 570 கோடி டாலர் (ரூ.40,600 கோடி) நிதி   ஒதுக்கீடு செய்ய ஜனநாயகக் கட்சியினர் அனுமதிக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக, சிறுவர்களாக இருக்கும்போது அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட 7 லட்சம் அகதிகள் நாட்டைவிட்டு 3 ஆண்டுகளுக்கு வெளியேற்றப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் அளிக்கப்படும்.
மேலும், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் வன்முறை காரணமாக தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு வந்த அகதிகளும் நாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு தற்காலிக சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும்.
எல்லை தடுப்புச் சுவர் மட்டுமன்றி, அவசரகால நிவாரண உதவிகளுக்காக 80 கோடி டாலரும் (ரூ.5,700 கோடி), போதைக் கடத்தலைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பக் கருவிகளைப் பெற 80.5 கோடி டாலரும் (ரூ.5,730 கோடி) பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
எனது இந்த யோசனை, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களிடையே நம்பகத்தன்மையையும், நல்லெண்ணத்தையும் அதிகரிக்கும். 
எனவே, இந்த யோசனையை இரு தரப்பினரும் ஆதரிக்க வேண்டும்.
எல்லையை தடுப்புச் சுவர் மூலம் பாதுகாக்காவிட்டால், அமெரிக்காவுக்குள் போதை மருந்துகளும், சட்டவிரோத 
குடியேற்றவாசிகளும் கடத்தப்படுவது தொடரும். இதனால், குற்றங்கள் அதிகரிக்கும்  என்று தனது உரையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக பட்ஜெட்டில் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
எனினும், அதற்கு ஜனநாயகக் கட்சியினர் மிகப் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுவது போல், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத பட்ஜெட்டை ஏற்பதற்கு அதிபர் டிரம்ப்பும் தயாராக இல்லை.
இதன் காரணமாக பட்ஜெட் நிறைவேறாததால், பல்வேறு முக்கிய அரசுத் துறைகளும் கடந்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன. 
அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்து வரும் இந்த அரசுத் துறைகள் முடக்கத்தின் விளைவாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில், டிரம்ப் இந்த யோசனையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT