உலகம்

ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் ஷாஹித் கான் அப்பாஸி கைது

DIN

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் கான் அப்பாஸியை ஊழல் தடுப்புப் பிரிவு அமைப்பு வியாழக்கிழமை கைது செய்தது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப்  பதவி வகித்த காலத்தில், பெட்ரோலியத் துறை அமைச்சராக அப்பாஸி இருந்தார். அப்போது கத்தாரிலிருந்து திரவ வடிவிலான இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
அதன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அப்பாஸி கைது செய்யப்பட்டுள்ளார்.
2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2018ஆம் ஆண்டு மே மாதம் வரை அப்பாஸி, பாகிஸ்தான் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
இஸ்லாமாபாதிலிருந்து லாகூருக்கு வியாழக்கிழமை காரில் வந்தபோது அதனை இடைமறித்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். தனக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நேரடி  உத்தரவின் பேரில் அப்பாஸி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அப்பாஸியின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அக்கட்சியின் மூத்த தலைவரான ஷாபாஸ் ஷெரீஃப், இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்க இம்ரான் கான் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், அல்-அஸிஸியா உருக்கு ஆலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
மற்றொரு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி ஜர்தாரியும் போலி வங்கிக் கணக்கு வழக்கில் கைதாகி, தற்போது ஊழல் தடுப்புப் பிரிவு அமைப்பின் காவலில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT