உலகம்

நாடு கடத்தும் விவகாரம்: மல்லையாவின் மனு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரணை

DIN


இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராகத் தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு மீதான விரிவான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என பிரிட்டன் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன்வாங்கிய விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குக் கடந்த 2016-ஆம் ஆண்டு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "மல்லையா கடன்களைத் திருப்பிச் செலுத்தாததற்கான ஆதாரங்கள் அனைத்தும் சரியாக உள்ளன. எனவே, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்தத் தடையுமில்லை' என்று கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவீத் கையெழுத்திட்டார். 

இந்நிலையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைக் கடந்த 2-ஆம் தேதி விசாரித்த பிரிட்டன் உயர்நீதிமன்றம், நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு மல்லையாவுக்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்தது. 

"வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்மா அர்பத்நாட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சில நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் மட்டுமே மல்லையாவின் மேல்முறையீட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது' என்று பிரிட்டன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரிட்டன் உயர்நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறுகையில், ""மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விரிவான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விசாரணை தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.

இதன் காரணமாக, விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""வழக்கினை எப்போது விசாரிக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் தன்னிச்சையாகவே முடிவு செய்யும். எனினும், மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT