உலகம்

அமெரிக்காவில் இந்தியச் சிறுமி மரணம்: வளர்ப்புத் தந்தைக்கு ஆயுள் தண்டனை

DIN


அமெரிக்காவில் 3 வயது இந்தியச் சிறுமி கொலை வழக்கில், கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட அவளது வளர்ப்புத் தந்தைக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ரிச்சர்ட்ஸன் நகரில் வசித்து வந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ், சினி மேத்யூஸ் தம்பதியினர் பிகார் மாநிலத்திலிருந்து ஷெரீன் என்ற சிறுமியை கடந்த 2016-ஆம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வந்தனர். அவர்களுடன், அவர்களுக்குப் பிறந்த மற்றொரு பெண் குழந்தையும் வசித்து வந்தது.
இந்த நிலையில், சிறுமி ஷெரீனை காணவில்லை என்று வெஸ்லி மேத்யூஸ் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். பால் அருந்த மறுத்ததற்கு தண்டனையாக அந்தச் சிறுமியை நள்ளிரவில் வெளியே நிறுத்தி வைத்ததாகவும், அதற்குப் பிறகு அவளைக் காணவில்லை என்றும் அதிகாரிகளிடம் மேத்யூஸ் தெரிவித்தார். அதையடுத்து 15 நாள்களுக்கு நடைபெற்ற தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஷெரீனின் சடலம் மேத்யூஸ் இல்லத்துக்கு சற்று தொலைவிலுள்ள கால்வாய் குழியிலிருந்து உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஷெரீனுக்கு தாம் கட்டாயப்படுத்தி பாலைப் புகட்டியபோது அந்தச் சிறுமி மூச்சு திணறி உயிரிழந்ததாக வெஸ்லி மேத்யூஸ் கூறினார்.
இதுதொடர்பாக டல்லாஸ் நீதிமன்றத்தில் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஷெரீனுக்கு மரணத்தை ஏற்படுத்தியது, அதனை மறைப்பதற்காக அந்தச் சிறுமியின் உடலை அப்புறப்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக வெஸ்லி மேத்யூஸ் தனது ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் புதன்கிழமை தீர்ப்பளித்தனர்.
முன்னதாக, குழந்தையை கவனிக்கத் தவறியதாக ஷெரீனின் வளர்ப்புத் தாய் சினி மேத்யூஸ் மீது கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. எனினும், அந்தக் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்க முடியாததால் அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
வேஸ்லி மேத்யூஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம், சிறுமி ஷெரீனின் மரணத்துக்கு உரிய நீதி கிடைத்துள்ளதாக ரிச்சர்ட்ஸன் நகர காவல்துறையினர் தங்களது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT