ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு, கிர்கிஸ்தானில் 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும், ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டுள்ளார். அதில் அவர் உரையாற்றியதாவது:
சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்துத் துறை, சபாஹார் துறைமுகம், அஷ்கபாட் ஒப்பந்தம் மற்றும் இந்தியா-மியான்மார்-தாய்லாந்து முக்கோண நெடுஞ்சாலை உள்ளிட்டவைகளின் மூலம் பிராந்திய இணைப்புக்கு இந்தியாவின் அர்ப்பணிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
2017-ல் காபூல்-காந்தஹார்-புது தில்லி-மும்பை இடையிலான விமானப் போக்குவரத்தும் செயல்படுத்தியுள்ளோம். நிலையான, வெளிப்படையான மற்றும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கைகள் உள்ளடங்கிய பிராந்திய இணைப்புக்கான முயற்சிகளை இந்தியா வரவேற்கிறது.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நமது சகோதர, சகோதரிகளுக்கு இதய அஞ்சலியை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். புல்வாமா தாக்குதலின் எங்களுக்கு ஏற்பட்ட காயம் மறைவதற்கு முன்பாகவே எங்கள் நட்பு நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கொடூரச் சம்பவம் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கு மேலும் உறுதியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, சீனா ஆதிக்கம் செலுத்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இந்தியா பார்வையாளராக இருந்தது. இந்நிலையில், அந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017ஆம் ஆண்டு முழுநேர உறுப்பினர்களாக இணைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.