உலகம்

மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து: இணைந்து பணியாற்றிட விருப்பம்

DIN

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றிட தாம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, இம்ரான் கான் தனது சுட்டுரையில் ஆங்கிலத்திலும், உருது மொழியிலும் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கராவதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்த அடுத்த சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் புதிய அரசு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை நிர்ணயிக்கவுள்ளது. எனவேதான், இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள், பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது.
இதை இம்ரான் கடந்த மாதம் சூசகமாகத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியிருந்ததாவது:
இந்திய மக்களவைத் தேர்தலில் மோடியின் பாஜக வெற்றி பெற்றால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கான சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.
இதேபோல், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காஷ்மீர் பிரச்னை உள்பட அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT