உலகம்

ஆப்கனில் தலிபான்கள் பயங்கரவாதத் தாக்குதல்: 48 பேர் பலி

DIN


ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரஃப் கனி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் மற்றும் அமெரிக்கத் தூதரகம் அருகே தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 48 பேர் உயிரிழந்தனர்.
மேலும், தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸரத் ரஹீமி கூறியதாவது:
ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிபர் அஷ்ரஃப் கனி பங்கேற்றார்.
அந்தக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புச் சாவடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இதில், 26 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர் என்று நஸரத் ரஹீமி தெரிவித்தார்.
பர்வான் மருத்துவமனை மருத்துவர் அப்துல் காசிம் கூறுகையில், உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். இதுதவிர, 42 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றார்.
இந்தத் தாக்குதலில் அதிபர் அஷ்ரஃப் கனி காயமின்றி உயிர் தப்பினார்.
காபூலில் குண்டுவெடிப்பு: பர்வான் மாகாணத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள், காபூல் நகரில் மற்றொரு குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்கத் தூதரகம் அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் முதலில் தெரிவிக்கவில்லை. எனினும், அந்தத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
தலிபான்கள் பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதல்களுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.
இதுகுறித்து அவர்கள் வெளிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வரும் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆப்கன் தேர்தலை சீர்குலைப்பதற்காக, பர்வான் மாகாண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தாக்குதல் நடத்தினோம்.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது என்று பொதுமக்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தோம்.
எனவே, இதுபோன்ற சம்பவங்களில் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பாவார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவானது.
எனினும், காபூலில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க வீரர் உள்பட 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அதையடுத்து, தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக தலிபான்கள் மிரட்டியிருந்தனர். இந்தச் சூழலில், தேர்தல் பேரணியிலும், அமெரிக்கத் தூதரகம் அருகிலும் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT