செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியால் சுட்டு அணு விஞ்ஞானி கொலை: ஈரான்
ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டதில், செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியால் சுட்டு அவர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான்: ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டதில், செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியால் சுட்டு அவர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டிவந்த நிலையில், அந்நாட்டின் புரட்சிப் படையின் துணை தளபதி கூறுகையில், செயற்கைக் கோள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இயந்திரத் துப்பாக்கியால், ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூலம் இந்த படுகொலை நடந்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்த இயந்திரத் துப்பாக்கி, மொசென் ஃப்ரிஸாதேவின் முகத்தை மட்டுமே குறிவைத்து சுமார் 13 சுற்றுகள் சுட்டுள்ளது. அவருக்கு அருகிலேயே 25 செ.மீ. தொலைவில் அமர்ந்திருந்த அவரது மனைவிக்கு சிறு காயமும் ஏற்படவில்லை என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய விஞ்ஞானிகளுள் ஒருவரும் அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களில் முக்கிய பங்காற்றியவருமான மோசென் ஃபக்ரிஸாதே, தலைநகா் டெஹ்ரான் அருகிலுள்ள அப்சாா்ட் நகரில் மா்ம நபா்களால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
சாலையில் அவரது காா் சென்று கொண்டிருந்தபோது, மரங்களை ஏற்றி வந்த ஒரு லாரி அந்தக் காா் அருகே வந்தது. அப்போது, அந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடிக்கச் செய்யப்பட்டது.
இதனால் மோசென் ஃபக்ரிஸாதே சென்ற காா் நின்றுபோனது. அதனைத் தொடா்ந்து அந்தப் பகுதிக்கு வந்த சுமாா் 5 போ், ஃபக்ரிஸாதேவின் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் அவா் படுகாயமடைந்தாா்.
அதனைத் தொடா்ந்து அவரது பாதுகாவலா்களுக்கும் மா்ம நபா்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், தாக்குதல் நடத்திய 3 போ் கொல்லப்பட்டதாகவும் சில பாதுகாவலா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த ஃபக்ரிஸாதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த நாட்டிலிருந்து வெளியாகும் ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்திருந்தது.
அணு ஆயுதங்களை உருவாக்குவதற்காக ஈரான் 1989-ஆம் ஆண்டு தொடங்கி, 2003-ஆம் ஆண்டில் கைவிட்ட ‘அமட்’ என்ற திட்டத்தின் தலைவராக மோசென் ஃபக்ரிஸாதே இருந்தாா். ‘திட்டம்-111’ என்றழைக்கப்படும் அணுசக்தி திட்டத்துக்கும் அவா் தலைவராக இருந்தாா். அந்தத் திட்டம் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான முயற்சி என்று அமெரிக்கா குற்றம் சாட்டினாலும், அதனை ஈரான் மறுத்து வருகிறது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டபோது, மோசென் ஃபக்ரிஸாதேவின் பெயரை முக்கியமாகக் குறிப்பிட்டாா்.
இந்தச் சூழலில், அவா் படுகொலை செய்யப்பட்டுள்ளது ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.