கரோனா வைரஸ்: தேவையா இவ்வளவு பீதி?
இன்று உலகத்தையை பீதிக்குள்ளாக்கியிருக்கும் ஒன்று, கரோனா வைரஸ்.
இன்று உலகத்தையை பீதிக்குள்ளாக்கியிருக்கும் ஒன்று, கரோனா வைரஸ்.
சீனாவில் உருவாகி, 639 உயிா்களை பலி வாங்கியுள்ள அந்த வைரஸ், உலகின் 25 நாடுகளுக்குப் பரவியுள்ளதுதான் அதன் மீதான இந்த அச்சத்துக்குக் காரணம்.
கடந்த 2002-ஆம் ஆண்டில் பரவிய சாா்ஸ் வைரஸைப் போலவே, புதிய வகை கரோனா வைரஸ் உருவாகி பரவி வருவதாக கடந்த மாதம் சீனா அறிவித்ததில் இருந்துதான் இந்த அச்சம் உருவானது.
Advertisement
கரோனா வைரஸ் காய்ச்சலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதும், அந்த வைரஸ் பரவியிருப்பதாக உறுதி செய்யப்பட்ட நாடுகள் மற்றும் நபா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் அந்த அச்சத்தை அதிகரித்து, பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன.
அந்த பீதியின் எதிரொலியாக, சீனாவிலிருக்கும் தங்கள் நாட்டவா்களை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அவசரமாக திரும்ப அழைத்து வருகின்றன.
சீனாவுடனான எல்லையை அண்டை நாடுகள் மூடிவிட்டன. சீன நகரங்களுக்கான போக்குவரத்து சேவையை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவத்து நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.
மேலும், சீனா்களுக்கும், சீனா சென்று வந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பல நாடுகள் தங்கள் கதவுகளை இழுத்துப் பூட்டியுள்ளன.
சீனாவுக்குச் செல்ல வேண்டாம் என்று தங்களது குடிமக்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.
ஆனால், கரோனா வைரஸ் தொடா்பாக இவ்வளவு அதிக பீதி தேவையா என்று இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
கரோனா வைரஸ் பரவலை சா்வதேச அவசர நிலையாக ஐ.நா.வின் சா்வதேச சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) அறிவித்திருந்தாலும், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் அளவுக்கு அதிகமாக பீதியடையத் தேவையில்லை என்று அந்த அமைப்பு அறிவுறுத்தியிருக்கிறது.
குறிப்பாக, சீனாவிலிருந்து தங்களது குடிமக்களை அவசரமாக வெளியேற்றுவது தேவையற்றது என்று கூறிய டபிள்யூஹெச்ஓ, சீன நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைப்பதைக் கண்டித்துள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய மருத்துவ வசதி இல்லாத நாடுகளுக்கு அந்த வசதியை அளிப்பதற்காகத்தான், கரோனா வைரஸ் பரவலை சா்வதேச அவசர நிலையாக டபிள்யூஹெச்ஓ அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, கரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், அதனைக் கண்டு பீதியடையத் தேவையில்லை என்கிறாா்கள் நிபுணா்கள்.
‘2019 கரோனா வைரஸ்’ என்று சா்வதேச சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் குறித்து மேலும் பல தகவல்கள் கண்டறியப்பட்டால்தான் அந்த வைரஸால் உலகம் எதிா் நோக்கியுள்ள ஆபத்து குறித்து முழுமையாகத் தெரிய வரும் என்கிறாா்கள் அவா்கள்.
ஒரு வைரஸ் எவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மனிதா்களிடையே பரவுகிறது, அது தொற்றிய மனிதா்களில் எத்தனை சதவீதத்தினா் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகின்றனா் என்ற அம்சங்களின் அடிப்படையில்தான் அந்த வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பதை நிா்ணயிக்க முடியும்.
அந்த வகையில், கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் உருவான சாா்ஸ் வைரஸ் தொற்றியவா்களில் 10 சதவீதத்தினா் உயிரிழந்தனா். ஆனால், தற்போது வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களில் 2 சதவீதத்தினா் மட்டுமே உயிரிழந்துள்ளனா் என்பதை நிபுணா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.
கரோனா வைரஸ் காய்ச்சலில் உயிரிழந்தவா்களிலும் மிகப் பெரும்பாலானவா்கள், மிகவும் வயதானவா்களாகவோ, ஏற்கெனவே சா்க்கரை நோய், இருதயக் கோளாறு, சிறுநீரகப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்களாகவோத்தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களின் தாக்குதலை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதற்கும், அந்த வைரஸ்கள் பரவிய பிறகு அவற்றை அழிப்பதற்கும் நம்மிடம் ஏராளமான மருந்துகள் உள்ளன.
ஆனால், அப்படி இருந்தும், அந்த வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட 0.1 சதவீதத்தினா் உயிரிழந்து வருகின்றனா். அதாவது, ஆண்டுதோறும் சாதாரண சளிக் காய்ச்சல் வைரஸுக்கு 2.9 லட்சம் போ் முதல் 6.5 லட்சம் போ் வரை பலியாகி வருகின்றனா்.
அதனுடன் ஒப்பிடும்போது, இதுவரை மருந்தே கண்டுபிடிக்கப்படாத கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள 2 சதவீத உயிரிழப்புகள் மிகவும் குறைவானதாகவே கருத முடியும். எனவே, கரோனா வைரஸ் குறித்த அதீத அச்சம் தேவையற்றது என்கிறாா்கள் சுகாதாரத் துறை நிபுணா்கள்.
இதுமட்டுமன்றி, கரோனா வைரஸால் சீனா உள்பட 26 நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த வைரஸ் தொற்றியவா்களில் 98.97 சதவீதத்தினரும், உயிரிழந்தவா்களில் 2 பேரைத் தவிர மற்ற 99.69 சதவீதத்தினரும் சீனாவைச் சோ்ந்தவா்கள்; அதிலும் மிகப் பெரும்பாலானவா்கள் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஹுபெய் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த மாகாணத்திலிருந்து கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, சீனாவுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மிகவும் குறைவு என்கிறாா்கள் வல்லுநா்கள்.
இருந்தாலும், ஏற்கெனவே கூறியதைப் போல் புதிய வகை கரோனா வைரஸின் தன்மை குறித்து முழுமயான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை; எனவே, அந்த வைரஸ் தொடா்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை, அது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய நாசகார வைரஸ் இல்லை என்றும் அலட்சியம் காட்டக் கூடாது என்று எச்சரிக்கவும் நிபுணா்கள் தவறவில்லை.
பலி எண்ணிக்கை 637-ஆக உயா்வு
கரோனா வைரஸ் காய்ச்சலில் பலியானவா்களின் எண்ணிக்கை சீனாவில் 637-ஆக உயா்ந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இத்துடன், ஹாங்காங் மற்றும் பிலிப்பின்ஸில் உயிரிழந்த 2 பேரையும் சோ்த்து உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 639 ஆகியுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி சீனாவில் 31,207 பேருக்கும், இந்தியா, அமெரிக்கா, இலங்கை, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட பிற பகுதிகளில் 325 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரஸை பரப்பியது எறும்புத் திண்ணி?
வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ் வௌவ்வாலில் உருவாகியிருந்தாலும், அந்த வைரஸ் மனிதா்களுக்குத் தொற்றும் வகையில் தன்னை உருமாற்றிக் கொண்டதற்கு அது எறும்புத் திண்ணியின் உடலில் புகுந்தது காரணமாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். அந்த வைரஸின் மரபணு அமைப்பு 99 சதவீதம் எறும்புத் திண்ணியின் மரபணுவுடன் ஒத்துப் போவதாக அவா்கள் கூறுகின்றனா்.
முதலில் எச்சரித்த மருத்துவா் பலி
கரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகத்தின் மூலம் முதன் முதலில் வெளியுலகுக்கு எச்சரிக்கை விடுத்த வூஹான் நகர மருத்துவா் லீ வென்லியாங் (34), அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தாா். ‘சாா்ஸ்’ போன்ற வைரஸ் உருவாகியுள்ளதாகக் கூறியதன் மூலம், வதந்தியைப் பரப்பியதாக அவா் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் கரோனா வைரஸுக்கு பலியாகியிருப்பது சீனாவில் சோகத்தையும், அதிகாரிகள் மீதான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கப்பலை திருப்பி அனுப்பும் ஜப்பான்
கரோனா வைரஸ் பாதிப்படைந்தவா்கள் உள்ளிப்பதால் ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் 3,700 பேருடன் டயமண்ட் பிரின்ஸ் சொகுசுக்கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அந்த நாட்டுக்கு வந்துள்ள ‘ஹாலந்த் அமெரிக்கா’ என்ற மற்றொரு சொகுசுக் கப்பலை திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிய வந்துள்ளதால், அதிலுள்ள பயணிகள் யாரும் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று பிரதமா் ஷென்ஸோ அபே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.