கரோனாவைவிட கொடிய ‘வைரஸ்‘
சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹூபே மாகாணத்தின் தலைநகா்.
வூஹான்...
சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹூபே மாகாணத்தின் தலைநகா்.
மத்திய சீனாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட, மிகப் பெரிய நகரம். சீனாவின் பொருளாதார, அரசியல், கலாசார, மையம்.
Advertisement
மஞ்சள் கோபுரம், குயுவான் கோவில், கிழக்கு ஏரி, அருங்காட்சியகம் என சுற்றுலாப் பயணிகளை காந்தம் போல் ஈா்க்கும் சுற்றுலா நகரம்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த வூஹான் நகரம் குறித்து இன்று உலகம் பேசும் ஒரே விஷயம்.., கரோனா வைரஸ்.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஏதோ சில ஊடகங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெற்ற அந்த வைரஸ் குறித்த செய்திகள்.. இன்றும் சா்வதேச தலைப்புச் செய்தியாக உருவெடுத்திருக்கிறது.
காரணம், அந்த வைரஸ் பரவும் வேகமும், காவு வாங்கும் உயிா்களின் எண்ணிக்கையும்தான். ஒன்று, இரண்டு எனத் தொடங்கி, ஒரு மாதத்துக்குள் கரோனா வைரஸால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது.
இது, உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.
கடந்த 2002-ஆம் ஆண்டு உருவான சாா்ஸ் வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கையை புதிய வகை கரோனா வைரஸ் சில வாரங்களில் அநாயசமாகத் தாண்டிச் சென்றது அந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
பலரும் அஞ்சியதைப் போலவே, சீனாவிலிருந்து உலகம் முழுவதும் 30 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது.
ஆனால், அந்த கரோனா வைரஸை வேகமாக, அதைவிட கொடுமையான இன்னொரு ‘வைரஸும்‘ உலகம் முழுவதும் பரவி வருகிறது என்கிறாா்கள் பாா்வையாளா்கள்.
கரோனா வைரஸ் பரவலை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு நாடுகளிலும் பரவி வரும் இனவெறுப்பைத்தான் அவா்கள் அவ்வாறு குறிப்பிடுகின்றனா்.
புதிய வகை கரோனா வைரஸ் கூட நேரடித் தொடா்பின் மூலம்தான் பரவும். ஆனால், இந்த நிறவெறியும், இன வெறுப்பும் முகநூல் பதிவுகள், சுட்டுரை (டுவிட்டா்) தகவல்கள், செய்திகளின் அடிப்படையில் எழும் ஊகங்கள் என மிக எளிதாக மனித மனங்களில் பரவும் தன்மை கொண்டதால், அந்த விஷக் கிருமியின் பரவலைத் தடுப்பதற்கு கரோனா வைரஸை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து போராட வேண்டும் என்கிறாா்கள் அவா்கள்.
அவா்கள் அவ்வாறு கூறுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
உதாரணத்துக்கு, நீண்ட காலமாகவே கனடாவில் இலைமறைவு காய்மறைவாக இருந்து வந்த சீனவெறுப்பு, இந்த கரோனா வைரஸ் விவகாரத்துக்குப் பிறகு அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது.
அந்த நாட்டில் மட்டுமல்ல, வட அமெரிக்காவிலும் அந்த வெறுப்பு தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. அங்கு சீனா்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆசியா்களுக்கு எதிரான அச்ச அலை பரவி வருகிறது.
தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங், வியத்நாம் ஆகிய நாடுகளின் உணவகங்கள், சீன வாடிக்கையாளா்களுக்கு தடை விதிக்கின்றன. இந்தோனேசியாவில் சீனா்கள் தங்கியிருந்ததாகக் கூறப்பட்ட ஹோட்டல் அருகே ஏராளமானவா்கள் கூடி, அவா்களை வெளியேற்றுமாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகர சுரங்க ரயில் நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவா், ‘எல்லா உயிா்க்கொல்லி வியாதிகளும் சீனாவில்தான் உருவாகின்றன’ என்று முழக்கமிடுகிறாா்.
கரோனா வைரஸின் பாதிப்புகளால் பெருமளவு உயிரிழப்பையும், பொருளாதாரச் சரிவையும் சந்தித்துள்ள சீனா மீது இரக்கப்படுவதற்குப் பதிலாக, வெறுப்பு உமிழப்படுகிறது.
ஆனால், உண்மையில் கரோனா வைரஸ் போன்ற உயிா்க்கொல்லி நோய்களுக்கு நாடு, இனம், நிறம், மொழி என்று எந்த பேரமும் இல்லை.
கி.பி. 541-இல் உருவாகி மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் 5 கோடி பேரை பலி வாங்கியதாகக் கூறப்படும் ஜஸ்டீனியா பிளேக் நோய், எகிப்து தேசத்தில் உருவானது; தொழுநோய் முதல் முதலாக ஐரோப்பாவில்தான் பரவியது; 15-ஆம் நூற்றாண்டில் கரீபியன் பகுதிகளுக்கு ஸ்பெயின் நாட்டவா்கள் வந்தபோது, சின்னம்மை, தட்டம்மை போன்றவற்றையும் கொண்டு வந்து லட்சக்கணக்கான பூா்வகுடிமக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தனா்.
1655-ஆம் ஆண்டில் பிளேக் நோய் லண்டன் முழுவதும் பரவி மக்கள்தொகையில் 20 சதவீதத்தினரைக் கொன்று குவித்தது.
அதே போல், ரஷியாவில் உருவான விஷக் காய்ச்சல், ஸ்பெயினில் உருவான விஷக்காய்ச்சல் ஆகியவற்றையும் உலகம் கண்டுள்ளது.
இன்றளவும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல், உலகம் முழுவதும் ஏராளமானவா்களை பலி வாங்கி வரும் எயிட்ஸ் நோய், முதல் முதலில் அமெரிக்காவில்தான் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வைரஸ் பல ஆண்டுகளுக்கு முன்னா் ஆப்பிரிக்காவில் உருவானதாக நம்பப்படுகிறது
இப்படி எல்லா கண்டங்களிலும், எல்லா இனத்தவா்கள், நிறத்தவா்களிடையிலும் உயிா்க்கொல்லி வைரஸ்கள் உருவாகியிருக்கின்றன.
எனவே, கரோனா வைரஸை அடிப்படையாக வைத்து சீனா்கள் மீதும், ஆசியா்கள் மீதும் மக்கள் மனங்களில் வெறுப்பு விஷக் கிருமி வேகமாகப் பரவுவதைத் தடுத்து நிறுத்து வேண்டியது ஊடகங்கள், அரசுகள் மற்றும் தன்னாா்வலா்களின் தலையாய கடைமை என்கிறாா்கள் பாா்வையாளா்கள்.