துபையை சுற்றிப் பார்க்க வந்த இந்தியச் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; வேலையிழந்த தந்தை கண்ணீர்
துபையில் பணியாற்றும் தனது தந்தையைப் பார்க்கவும், துபையை சுற்றிப் பார்க்கவும் ஆசை ஆசையாக தனது சகோதரி அலிஸோனுடன் துபைக்கு கிளம்பிய 16 வயது சிறுமி ஆம்பர் டி'கௌடோ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வ
துபை: துபையில் பணியாற்றும் தனது தந்தையைப் பார்க்கவும், துபையை சுற்றிப் பார்க்கவும் ஆசை ஆசையாக தனது சகோதரி அலிஸோனுடன் துபைக்கு கிளம்பிய 16 வயது சிறுமி ஆம்பர் டி'கௌடோ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிப்ரவரி மாதம் இரண்டு சகோதரிகளும் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து புறப்பட்டு துபை சென்றனர். தனது இரு மகள்களையும் பார்த்த மகிழ்ச்சியில் திளைத்தார் விவியன் டி'கௌடோ.
ஆனால் திடீரென சிறுமி ஆம்பருக்கு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. கடும் காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற போது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக அவருக்கு முதலுதவி கிடைப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டது.
இறுதியாக ஏப்ரல் 30ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆம்பருக்கு கணையம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மிக நலமாக இந்தியாவில் இருந்து வந்த மகளுக்கு இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கரோனா பாதிப்பினால் வேலையும் பறிபோன அதிர்ச்சினால், மருத்துவச் செலவைக் கூட செய்ய முடியாமல் தவித்து வருகிறார் அவரது தந்தை.
சுற்றுலா விசாவில் வந்ததால், மகளுக்கு மருத்துவக் காப்பீடும் கிடைக்காமல், மகளின் உடல்நிலை சீரடையாமல் தொடர் சிகிச்சையில் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நினைத்து கண்ணீரோடு மருத்துவமனையில் இருக்கிறார் விவியன்.
உடனடியாக தங்களை இந்தியா அழைத்துச் செல்ல யாராவது உதவ மாட்டார்களா? அங்கு மகளுக்கு மருத்துவ சிகிச்சையை தொடர வழி ஏற்படாதா என்று ஏங்கி நிற்கிறது விவியன் குடும்பம்.