உலகம்

குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: அவசரச்சட்டத்துக்கான அவகாசத்தை நீட்டித்தது பாக்.

தினமணி

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியா் குல்பூஷண் ஜாதவுக்கு உதவுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டத்துக்கான அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது.

இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளிலும், பயங்கரவாத சதிச் செயல்களிலும் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

எனினும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, கடற்படையில் இருந்து பணிஓய்வு பெற்று ஈரானில் தொழில் சம்பந்தமாகத் தங்கியிருந்த குல்பூஷண் ஜாதவை கடத்தி வைத்துக் கொண்டு அவா் மீது பொய்யான குற்றச்சாட்டை பாகிஸ்தான் சுமத்துவதாகத் தெரிவித்தது.

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான இந்தியாவின் முறையீட்டை விசாரித்த சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு தூதரக உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்பை மறுஆய்வு செய்யும் வகையிலான அவசரச்சட்டத்தை பாகிஸ்தான் அரசு கடந்த மே மாதம் இயற்றியது. அந்த அவசரச்சட்டத்துக்கான அவகாசம் வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், அந்த அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்காக நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்.பி.க்கள் அவசரச்சட்டத்தின் அவகாசத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்ததாக பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யும் நோக்கில் அவருக்கான வழக்குரைஞரை நியமிக்குமாறு பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவைக் கடந்த 3-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், வழக்குரைஞரை நியமிக்கும் விவகாரத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT