அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் துணை அதிபராகப் பொறுப்பேற்றார். இதன்மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் அதிபராகப் பதவியேற்கும் இரண்டாவது கத்தோலிக்க கிறிஸ்துவர் ஜோ பைடன். பைடன் குடும்பத்தைச் சேர்ந்த 127 ஆண்டுப் பழைமையான பைபிளை வைத்துப் பதவியேற்றார் ஜோ.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் பைடன் போட்டியிட்டார். அதில் 306 மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், வாஷிங்டனில் கேபிடால் வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பைடன் அதிபராகப் பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா கலந்துகொண்டனர்.
விழாவில் தேர்தலில் தோற்ற டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை. 1869-க்குப் பிறகு இப்போதுதான், முதல் முறையாகப் புதிய அதிபர் பதவியேற்பில் முந்தைய அதிபர் பங்கேற்கவில்லை. 1869-க்கு முன் மூவர் இவ்வாறு பங்கேற்காமல் இருந்திருக்கின்றனர்.