அவசரநிலை: சாலையில் ஆயுதம் ஏந்திய வீரர்கள்; கடைகள் திறப்பு
இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் கோத்தபய ராஜபட்ச அரசாணை பிறப்பித்திருந்த நிலையில், இன்று காலை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.
இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் கோத்தபய ராஜபட்ச அரசாணை பிறப்பித்திருந்த நிலையில், இன்று காலை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.
சாலைகளில், ஆயுதம் ஏந்திய காவலர்களும், ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேகப்படும் யார் ஒருவரையும், அவர்களை கைது ஆணை இல்லாமலேயே கைது செய்ய அதிகாரம் பெற்றுள்ளது.
நாட்டில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவை மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய ராணுவத்துக்கு அதிபர் உத்தரவிட்டிருக்கும் நிலையில், முக்கிய இடங்களில் ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் இல்லம் முன்பு போராட்டம்
இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டீசல் இல்லாததால் அங்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவிளக்குகளையும் அரசு அணைத்துள்ளதால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது.
உயிரைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா ரூ.7,500 கோடி கடனுதவி
நிதி நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்காக, பாரத ஸ்டேட் வங்கி மூலமாக இந்திய அரசு ரூ.7,500 கோடி (100 கோடி டாலா்) கடனுதவி வழங்கியிருந்தது.
இதற்கான ஒப்பந்தம் தில்லியில் இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கடந்தவாரம் கையொப்பமானது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், இந்தியா வந்துள்ள இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்ச, தில்லியில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா். அப்போது, உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்காக இலங்கைக்கு ரூ.7,500 கோடி (100 கோடி டாலா்) கடனுதவி வழங்குவதற்காக, இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி, இலங்கை அரசு இடையே ஒப்பந்தம் கையொப்பமானது என்று அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, எரிபொருள்கள் வாங்குவதற்காக, இலங்கை அரசுக்கு இந்தியாவின் எக்ஸிம் வங்கி கடந்த மாதம் ரூ.3,700 கோடி (50 கோடி டாலா்) கடனுதவி வழங்கியது.
இந்த நிலையில், மேலும் ரூ.7500 கோடி கடனுதவி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.