இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது ஏன்?
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். இதில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக, வெள்ளிக்கிழமை இரவு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில், நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருதியும் பொது மக்களின் பாதுகாப்பு, அத்தியாவசியப் பொருள்களின் தடையற்ற விநியோகம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் இல்லம் அருகே வெடித்த போராட்டம்
இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினா்.
அப்போது, அதிபரின் இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த தடையை மீறி சென்ற போராட்டக்காரா்களை போலீஸாா் கண்ணீா்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டீசல் இல்லாததால் அங்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவிளக்குகளையும் அரசு அணைத்துள்ளதால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது.
உயிரைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதைக் கண்டித்தும், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரியும் ஏராளமான பொதுமக்கள் பங்கிரிவட்ட லேன் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.