இலங்கை நிதியமைச்சராகத் தொடர்கிறார் அலி சப்ரி!
நாட்டின் பொருளாதாரத்தை மீட்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் பிரதமர் மகிந்த ராஜபட்ச தவிர, இலங்கை அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
இதையடுத்து கடந்த வாரம், அலி சப்ரி உள்பட நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில், நீதியமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி, பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அலி சப்ரி,
'நிதி அமைச்சராக நான் இன்று பேசுகிறேன். நிதியமைச்சர் பொறுப்பை அதிபர் எனக்கு வழங்கியுள்ளார்.
சர்வதேச சமூகம், ஐ.எம்.எப், நட்பு நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய யூனியன் ஆகியவை, இந்த அரசியல் நிச்சயமற்ற தன்மை நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் தீங்கானது என்று வலியுறுத்தியுள்ளன.
இந்தப் பதவிக்கு பொருத்தமான ஒருவர் பதவியேற்க முன்வராவிட்டால் நாட்டுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்' என்று பேசியுள்ளார்.
அதிபர் கோத்தபய ராஜபட்ச, அலி சப்ரியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இலங்கையின் நிதியமைச்சராக அலி சப்ரி தொடர்கிறார் என்று நேற்று தகவல்கள் வெளியான நிலையில், அலி சப்ரியே நாடாளுமன்றத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.