உலகம்

உலகை வியப்பில் ஆழ்த்திய தொலைநோக்கி: யார் இந்த ஜேம்ஸ் வெப்?

DIN

பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியாக ஒளிக்கதிர்களை பதிவு செய்யும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பெயரில் இருக்கும் ஜேம்ஸ் வெப் என்பவர் யார்? 

விண்வெளி ஆய்வுக்காக 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.79,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப்(james webb space telescope) எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விண்வெளியில் செலுத்தியது. இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தைதான் நாசா நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது.

1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் இந்த பிரபஞ்சம் உருவானதாக நம்பப்படுகிறது. பிரபஞ்சத்தில் நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான படம்

இவற்றில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்களில்  ஏராளமான நட்சத்திர திரள்கள் காணப்படுகின்றன. புகைப்படத்தின் முன்பகுதியில் மாபெரும் நட்சத்திர திரள்களும், பின்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர திரள்களும் பிரகாசமாக ஒளிா்கின்றன. இந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியானது, பெருவெடிப்பு நிகழ்ந்த ஆரம்ப காலத்தைக் காட்டுவதாகும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்தத் தொலைநோக்கியின் பெயரிலிருக்கும் ஜேம்ஸ் வெப் என்பவர் யார்?

ஜேம்ஸ் எட்வின் வெப் 1906 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றியவர் 1945-ல் கடற்படையில் தளபதியாக  இருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர், சிலகாலம் அமெரிக்க அதிபர் ஹாரிஸ் எஸ்.டிரமனின் துணைச் செயலாளராக பணிபுரிந்தார். அதற்குப் பின்,  அதிபர் ஜான் எஃப் கென்னடி 1961 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வெப்பை நாசாவின் தலைமை நிர்வாகியாக  நியமித்தார். 

அப்போது, ஜேம்ஸ் வெப் நாசாவின் 2-வது நிர்வாகி என்பதால் அதன் வளர்ச்சிகளுக்கு அதிக கவனங்களை செலுத்தியுள்ளார். குறிப்பாக, விண்வெளி சார்ந்து மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான ஆய்வுகளை ஒரே அமைப்பிற்குள் கொண்டுவந்தது, அப்பல்லோ திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியதில் அழுத்தங்கள் இருந்தபோதும் மனிதர்களைக் கொண்ட விண்கல மையம் மற்றும் ஜான்சன் விண்வெளி மையத்தை உருவாக்கியது போன்ற திட்டங்களில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. மேலும், மரைனர்(mariner) மற்றும் பையனிர்(pioneer) விண்கல திட்டங்களுடன் நாசா பிரபஞ்ச ஆய்வுத் திட்டத்தை மேற்கொள்வதையும் உறுதி செய்தார்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - james webb space telescope

மேலும், வெப் நாசாவில் அதிக ஆண்டுகள் பணியாற்றிய நிர்வாகி என்பதால் சில தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளார். அவற்றில் அப்பல்லோ-1 விண்கலன் 1967 ஆம் ஆண்டு சோதனையின்போது வெடித்து சிதறியதில் 3 பேர் பலியானது தொடர்பாக விமர்சனங்களைச் சந்தித்ததுடன் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். 

1961-ல் நாசாவில் இணைந்த ஜேம்ஸ் வெப் 1968 ஆம் ஆண்டு பொறுப்பிலிருந்து விலகினார். அதற்கு அடுத்த ஆண்டான 1969-ல்தான் நாசா அனுப்பிய அப்பல்லோ-11 விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவருடைய குழுவினர் முதன்முறையாக நிலவில் தரையிறங்கி தடம்பதித்தனர்.

விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இச்சாதனையை நாசா அடைந்ததற்கு ஜேம்ஸ் வெப்பின் 8 அண்டுகால பங்களிப்பும் இருந்திருக்கிறது. அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய வெப் 1992 ஆம் ஆண்டு தன்னுடைய 85-வது வயதில் மறைந்தார்.

விண்வெளி ஆய்வில் ஜேம்ஸ் காட்டிய ஈடுபாட்டின் நினைவாக  அவருடைய பெயரைத்தான் நாசா தற்போதைய சக்திவாய்ந்த தொலைநோக்கிக்கு வைத்துள்ளது. 

இருப்பினும், இதற்கிடையே ஜேம்ஸ் வெப் வெளியுறவுத் துறையில் பணியாற்றிய ஓரிணைச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும் அதனால் அவருடைய பெயரை தொலைநோக்கிக்கு வைக்கக்கூடாது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT