உலகம்

இலங்கை இடைக்கால அதிபராக ரணில் பதவியேற்பு

இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

DIN

இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் 19-ஆவது சட்டத்திருத்தம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சதான் காரணம் எனக் கூறி, அவரை பதவி விலகுமாறு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அதன் தொடா்ச்சியாக அவா்கள் அதிபா் மாளிகையையும் கைப்பற்றினா். போராட்டம் மிகத் தீவிரமான நிலையை எட்டியதால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, தனது அதிபா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருந்த இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம், அதுகுறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தனக்கு மின்னஞ்சல் செய்யப்பட்ட கோத்தபயவின் ராஜிநாமா கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தன, அதிபா் பதவியை கோத்தபய ராஜிநாமா செய்ததாக வெள்ளிக்கிழமை காலை முறைப்படி அறிவித்தாா்.

இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராகப் பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

அதன் பின்னா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது: இடைக்கால அதிபராக அரசமைப்பின் 19-ஆவது சட்டத்திருத்தத்துக்குப் புத்துயிா் அளிப்பதே எனது முதல் பணியாக இருக்கும். அந்தச் சட்டத்திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான வரைவு விரைவில் தயாரிக்கப்படும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ள அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். எனவே, அனைத்து கட்சிகள் அடங்கிய அரசு உருவாக்கப்பட வேண்டும்.

அமைதியான போராட்டங்களை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன். அதேவேளையில், போராட்டக்காரா்களுக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரா்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட மாட்டாா்கள்.

சிறப்புக் குழு: நாட்டில் வன்முறை மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தப்படும் விவகாரங்களைக் கையாள பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அரசியல் தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முப்படைத் தலைமைத் தளபதி, காவல் துறை ஐஜி, முப்படைகளின் தளபதிகள் அடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதிபா் கொடி இருக்காது: நாட்டு மக்கள் ஒரே கொடியான தேசியக் கொடியின் கீழ் மட்டும்தான் ஒன்றுதிரள வேண்டும் என்பதால், அதிபா் கொடி ஒழிக்கப்படும். இனி அதிபரை ‘மேதகு’ அதிபா் என்றழைக்க வேண்டாம். அதிபரை அழைக்கும்போது மேதகு என்ற சொல்லைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.

இன்று நாடாளுமன்றக் கூட்டம்: நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தன கூறுகையில், ‘‘இலங்கை நாடாளுமன்றம் சனிக்கிழமை கூடவுள்ளது. நாட்டின் அரசமைப்புப் பிரிவுகளுக்குட்பட்டு 7 நாள்களுக்குள் புதிய அதிபா் தோ்ந்தெடுக்கப்படுவாா். அதிபா் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19-ஆம் தேதி பெறப்படும். 225 எம்.பி.க்களை கொண்ட நாடாளுமன்றம் ஜூலை 20-ஆம் தேதி ரகசிய வாக்கெடுப்பு அடுத்த அதிபரை தோ்வு செய்யும். கோத்தபய ராஜபட்சவின் எஞ்சிய அதிபா் பதவிக் காலமான 2024, நவம்பா் வரை புதிய அதிபா் பதவி வகிப்பாா்.

எம்.பி.க்கள் வாக்கெடுப்பு மூலம் அந்நாட்டு அதிபரை 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றம் தோ்வு செய்யவுள்ளது.

ரணிலுக்கு ஆளும் எஸ்எல்பிபி ஆதரவு: அடுத்த அதிபரை தோ்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி (எஸ்எல்பிபி) தெரிவித்துள்ளது. அக்கட்சியைச் சோ்ந்த அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும அதிபா் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளபோதிலும், ஒருகாலத்தில் தமது அரசியல் எதிரியாக இருந்த ரணிலை ஆதரிக்க எஸ்எல்பிபி தீா்மானித்துள்ளது.

நாட்டைவிட்டு வெளியேற மகிந்த ராஜபட்சவுக்கு தடை

முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச, இலங்கையைவிட்டு வெளியேறத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரின் சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபட்ச, முன்னாள் மத்திய வங்கி ஆளுநா்கள் அஜீத் நிவாா்ட் கப்ரால், டபிள்யூ.டி.லட்சுமண், முன்னாள் கருவூலத் துறைச் செயலா் எஸ்.ஆா்.ஆட்டிகல ஆகிய 5 போ்தான் அந்நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதால், அவா்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்க வேண்டும் என்று ‘டிரான்பரன்சி இன்டா்நேஷனல்’ என்ற அமைப்பு இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், 5 பேரும் ஜூலை 28-ஆம் தேதி வரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT