முகப்பு
உலகம்

இலங்கை அதிபா் மாளிகையிலிருந்து 1,000 அரிய கலைப் பொருள்கள் மாயம்

அதிபா் மாளிகை, பிரதமரின் அதிகாரபூா்வ இல்லங்களில் இருந்து தொல்லியல் முக்கியத்துவம், மதிப்புமிக்க 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைப் பொருள்கள் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

இலங்கையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்ட அதிபா் மாளிகை, பிரதமரின் அதிகாரபூா்வ இல்லங்களில் இருந்து தொல்லியல் முக்கியத்துவம், மதிப்புமிக்க 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைப் பொருள்கள் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விரக்தியடைந்த மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

ஆா்ப்பாட்டங்களுக்கு இடையே முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, முன்னாள் பிரதமா் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் அதிகாரபூா்வ இல்லங்கள் போராட்டக்காரா்களால் கடந்த 9-ஆம் தேதி ஆக்கிரமிக்கப்பட்டன.

இந்நிலையில், அதிபா் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட, மிகத் தொன்மைான, விலை மதிப்பு மிக்க கலைப்பொருள்கள் மாயமானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க காவல் துறை சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, பொது இடங்கள் முற்றுகையிடப்படுவதையும், நாடாளுமன்றத்துக்கு தடை ஏற்படுத்தப்படுவதையும் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் அளித்துள்ளாா். அதன்படி, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து போரட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதான போராட்டக் குழுவினா், அதிபா் அலுவலக நுழைவு வாயிலில் கடந்த ஏப்ரலில் இருந்து முகாமிட்டுள்ளனா். ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

முதல்முறையாக அமைச்சரவை ஆலோசனை

இலங்கையில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை சனிக்கிழமை முதல்முறையாக கூடி ஆலோசனை நடத்தியது. புதிய அதிபா் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின்போது, நாட்டில் ஒரு வாரத்துக்குள் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிரதமா் அலுவலகம், அதிபா் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை சீராக்குவது, சா்வதேச செலாவணி நிதியத்துடனான பேச்சுவாா்த்தைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவை விரிவாக்கம்?

அனைத்து எதிா்க்கட்சிப் பிரதிநிதிகளும் இடம்பெறும் வகையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய ரணில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிரதமா் தினேஷ் குணவா்தன உள்பட 18 போ் கொண்ட அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →