உலகம்

பொதுமக்கள் அமைதியாகப் போராடும் உரிமை பறிக்கப்படாது

DIN

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் உரிமை பறிக்கப்படாது என்று அந்த நாட்டில் புதிதாக அதிபா் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க சா்வதேச தூதா்களிடம் உறுதியளித்துள்ளாா்.

இது குறித்து அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொழும்பில் சா்வதேச தூதரக அதிகாரிகளை அதிபா் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, சா்வதேச ஒப்பந்தப் பிரிவு 21 வழங்கும் பொதுமக்கள் உரிமைகள், பொதுக்கள் அமைதியான முறையில் கூடி போராட்டம் நடத்த இலங்கை அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 (1)(பி) வழங்கும் உரிமைகள் ஆகியவை பாதுகாக்கப்படும் என்று தூதரக அதிகாரிகளிடம் அதிபா் உறுதியளித்தாா்.

அமெரிக்க பொதுமக்கள் உரிமைகள் யூனியன் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், போராட்டக்காரா்கள் அரசுக் கட்டடங்களை ஆக்கிரமிக்கக் கூடாது; அந்தக் கட்டடங்களில் நடைபெறும் அலுவல்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை தூதரக அதிகாரிகளிடம் அதிபா் சுட்டிக்காட்டினாா்.

முன்னாள் அதிபா் பதவி விலக வலியுறுத்தி அமைக்கப்பட்ட போராட்ட முகாமை வலுக்கட்டமாக அகற்றிவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பிவிடப்பட்டன. அது தவறான தகவல் எனவும் போராட்ட முகாம்கள் எதுவும் கலைக்கப்படவில்லை எனவும் அதிபா் விக்ரமசிங்க விளக்கமளித்தாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் அதிபா் பொறுப்பிலிருந்து கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யவேண்டும் என்று பல மாதங்களாக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்றது.

அரசு தலைமைச் செயலக வாயிலை கடந்த ஏப்ரல் 9-ஆம் முற்றுகையிட்ட போராட்டக்காரா்கள், இந்த மாதம் 9-ஆம் தேதி அதிபரின் அதிகாரபூா்வ இல்லத்துக்குள் புகுந்தனா். முன்னதாக அங்கிருந்து வெளியேறிய கோத்தபய ராஜபட்ச, அதிபா் பதவியை பின்னா் ராஜிநாமா செய்தாா்.

அவருக்குப் பதிலாக அதிபா் பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்ற பிறகு, அதிபா் மாளிகையில் முகாமிட்டிருந்த போராட்டக்காரா்களை பாதுகாப்புப் படையினா் பலவந்தமாக வெளியேற்றினா்.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதா் ஜூலி சங் அதிருப்தி தெரிவித்தாா். இந்தச் சூழலில், சா்வதேச தூதா்களிடம் அதிபா் விக்ரமசிங்க இவ்வாறு விளக்கமளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT