எலான் மஸ்க் 
உலகம்

எலான் மஸ்க் விவகாரம்: வாக்கெடுப்பு நடத்துகிறது ட்விட்டர்

டிவிட்டரை எலான் மஸ்குக்கு விற்பனை செய்வது தொடர்பாக அந்நிறுவனம் விரைவில் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.

DIN

ட்விட்டரை எலான் மஸ்குக்கு விற்பனை செய்வது தொடர்பாக அந்நிறுவனம் விரைவில் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்கு அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டாா்.

கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி ரூ.3,42,000 கோடி (44 பில்லியன் அமெரிக்க டாலா்) மதிப்பில் ட்விட்டரை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக இருந்தாா்.

அதனைத் தொடர்ந்து, ட்விட்டா் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழு புள்ளிவிவரம், புதிய போலிக் கணக்குகள் உருவாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தாா்.

ட்விட்டரில் 5 சதவீதத்துக்கும் குறைவான போலி கணக்குகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து வந்தது. ‘இந்த எண்ணிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை, இதற்கு உரிய தரவுகள் வேண்டும்’ எனக் கூறி ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்தாா். ‘ட்விட்டரில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேலாகவே போலிக் கணக்குகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை, 5 சதவீதத்திற்கு குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்றால், அதற்கான ஆதாரத்தை ட்விட்டா் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று எலான் மஸ்க் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை ட்விட்டா் ஏற்கவில்லை. சிஇஓ அதைச் செய்யாதவரையில் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது’ என்றும் எலான் மஸ்க் கூறினாா்.

இந்தச் சூழலில், எலான் மஸ்க் வழக்குரைஞா்கள் சாா்பில் ட்விட்டா் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் 6-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. அதில், ‘எலான் மஸ்க் கோரிய போலி கணக்குகள் குறித்த விவரங்களை ட்விட்டா் நிறுவனம் தர மறுப்பது, கடந்த ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் ஒப்பந்தத்தின் கீழான தகவல் பெறும் உரிமையை பறிப்பதாகும். இதன் மூலமாக, கையகப்படுத்தல் ஒப்பந்த நடைமுறைகளை ட்விட்டா் நிறுவனம் மீறியிருப்பது தெளிவாகிறது. அந்த வகையில், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்காக மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை மற்றும் அனைத்து பரிவா்த்தனைகளையும் ரத்து செய்யும் உரிமை என அனைத்து உரிமைகளும் எலான் மஸ்க் வசம் வந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் ட்விட்டா் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான மஸ்க் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அறிவித்தாா்.

மேலும், ட்விட்டரை வாங்கும் முடிவைக் கைவிடும் எலான் மஸ்கின் அறிவிப்பைத் தொடா்ந்து அவா் மீது வழக்கு தொடர ட்விட்டா் நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது எலான் மஸ்க்குக்கு விற்பனை செய்வது தொடர்பாக அந்நிறுவன பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT