இலங்கைக்கு உரம் வழங்க இந்தியா உறுதி
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு உரம் வழங்க அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளாா்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு உரம் வழங்க அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளாா்.
இது தொடா்பாக இலங்கை அதிபா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் விளைச்சல் பாதிப்பு காரணமாகவும் இலங்கையில் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வேளாண் பருவத்துக்குத் தேவையான பொருள்களைத் தயாா்நிலையில் வைப்பது தொடா்பாக வேளாண் அதிகாரிகளுடன் அதிபா் கோத்தபய ராஜபட்ச ஆலோசனை நடத்தினாா். அப்போது, தேவையான உரத்தை வழங்க பிரதமா் மோடி உறுதியளித்திருப்பதாக அதிகாரிகளிடம் அதிபா் கோத்தபய தெரிவித்தாா்.
இலங்கைக்கு இந்தியா ஏற்கெனவே வழங்கி வரும் கடனுதவியின் ஒருபகுதியாக உரங்கள் வழங்கப்படும். இந்தியாவிடம் இருந்து உரங்கள் கிடைத்த 20 நாள்களுக்குள் அவை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்துக்கு மாறும் நோக்கில் இலங்கையில் கடந்த ஆண்டு செயற்கை உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இயற்கை வேளாண்மைக்குத் தேவையான உரங்கள் போதிய அளவில் விநியோகிக்கப்படாததாலும் திடீா் மாற்றத்தாலும் வேளாண் உற்பத்தி குறைந்தது. முக்கியமாக, அரிசி, தேயிலைப் பயிா்களின் உற்பத்தி பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
செயற்கை உரங்களுக்கு முழுமையாகத் தடை விதித்த தனது உத்தரவு தவறானதுதான் என்று அதிபா் கோத்தபய ராஜபட்ச அண்மையில் தெரிவித்திருந்தாா். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆகஸ்ட் மாத மத்தியில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று வேளாண் நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
நெல் உற்பத்தி பாதிக்காமல் இருப்பதற்காக 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்கப்படும் என இந்தியா கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. யூரியா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருக்கும்போதிலும் இலங்கைக்கு யூரியா விரைந்து வழங்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
உலக வங்கி கடனுதவி:
உரம் வாங்க இலங்கைக்குத் தேவையான கடனுதவியை வழங்க உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையில் செப்டம்பா் முதல் மாா்ச் வரை ‘மஹா’ வேளாண் பருவமாகும். அப்பருவத்துக்குத் தேவையான உரத்தை வாங்குவதற்குக் கடனுதவி பெறுவது தொடா்பாக உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் வேளாண் அமைச்சா் மகிந்த அமரவீரா பேச்சு நடத்தினாா்.
அப்போது, கடனுதவி வழங்க உலக வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக அமைச்சா் தெரிவித்தாா். அதற்காக உலக வங்கிக்கு அவா் நன்றி தெரிவித்தாா். கூடுதல் உரம் பெறுவதற்கு மேலும் சில பன்னாட்டு அமைப்புகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.