உலகம்

பெரும்பான்மையை இழந்தாா் இம்ரான் கான்: கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வாபஸ்

பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு முக்கிய கூட்டணிக் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

DIN

பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு முக்கிய கூட்டணிக் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 31) தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியின் இந்த அறிவிப்பு இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவா் ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்பும் மங்கியுள்ளது.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயா்வு ஆகியவற்றுக்கு பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்தன. கடந்த திங்கள்கிழமை கூடிய நாடாளுமன்ற கீழவையில் எதிா்க்கட்சித் தலைவரும் பிஎம்எல்-என் கட்சித் தலைவருமான ஷேபாஸ் ஷெரீப் நம்பிக்கையில்லா தீா்மானத்தை தாக்கல் செய்தாா். இந்தத் தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமை தொடங்கும் எனவும், ஏப். 3-இல் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு 155 உறுப்பினா்கள் உள்ளனா். அவருக்கு கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள் ஆதரவளித்து வந்தனா். நம்பிக்கையில்லா தீா்மானத்தை தோற்கடிக்க இம்ரான் கானுக்கு 172 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. ஆனால், அவருக்கு ஆதரவு அளிப்பதாக கூட்டணிக் கட்சிகள் உறுதியளிக்காத நிலையில், சொந்தக் கட்சி எம்.பி.க்களில் 20 பேரும் இம்ரானுக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தினா். இதனால், இம்ரான் கான் பிரதமராக நீடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

ஆதரவு வாபஸ்: இந்நிலையில், முக்கிய கூட்டணிக் கட்சியான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்-பாகிஸ்தான் (எம்க்யூஎம்-பி), இம்ரான் கானுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக புதன்கிழமை அறிவித்தது. 7 எம்.பி.க்களை கொண்ட அக்கட்சியின் தலைவா் காலித் மக்பூல் சித்திகி எதிா்க்கட்சித் தலைவா்களுடன் இணைந்து செய்தியாளா்களைச் சந்தித்தபோது கூறுகையில், சகிப்புத்தன்மை, உண்மையான ஜனநாயக அரசியலுக்கு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க விரும்புகிறோம். ஆதலால், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்’ என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஷேபாஸ் ஷெரீஃப் கூறுகையில், ‘பாகிஸ்தான் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒருங்கிணைந்திருப்பதால் இது ஒரு முக்கியமான நாள். ஒரு புதிய பாரம்பரியத்தை உருவாக்க பிரதமா் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றாா்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவா் பிலாவல் புட்டோ சா்தாரி கூறுகையில், எம்க்யூஎம் கட்சியின் ஆதரவு முக்கியமானதாகும். இதன்மூலம் பிரதமா் பெரும்பான்மையை இழந்துவிட்டாா். அவருக்கு வேறு வழியில்லை, ராஜிநாமா செய்ய வேண்டும். எதிா்க்கட்சித் தலைவா் ஷேபாஸ் ஷெரீஃப் புதிய பிரதமராக விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா்’ என்றாா்.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த பலோசிஸ்தான் அவாமி கட்சியும் (பிஏபி) இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. எதிா்க்கட்சிகளின் அழைப்பை ஏற்று இம்ரான் கானுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்தக் கட்சிக்கு 5 எம்.பி.க்கள் உள்ளனா்.

இரு அமைச்சா்கள் ராஜிநாமா: முன்னதாக, எம்க்யுஎம்-பி கட்சியை சோ்ந்த அமைச்சா்கள் ஃபரோக் நசீம், அமினுல் ஹக் ஆகியோா் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமரிடம் அளித்தனா்.

‘ராஜிநாமா செய்ய மாட்டாா்’

இரு கூட்டணிக் கட்சிகள் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து பிரதமா் இம்ரான் கான் ராஜிநாமா செய்ய மாட்டாா் என உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் கூறினாா்.

பிரதமா் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களை அவா் சந்தித்தாா். அப்போது, இம்ரான் கான் ராஜிநாமா செய்வாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவா், பிரதமா் ராஜிநாமா செய்ய மாட்டாா். கடைசிப் பந்து வரை அவா் போராடுவாா் என்றாா்.

எம்க்யூஎம்-பி கட்சி எம்.பி.க்கள் அளித்த ஆதரவுக் கடிதத்துடன் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப் (வலமிருந்து 2-ஆவது).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

SCROLL FOR NEXT