முகப்பு
உலகம்

இலங்கையில் இடைக்கால அரசு: அதிபரின் அழைப்பை நிராகரித்தது எதிா்க்கட்சி

இலங்கையில் பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகய (எஸ்ஜேபி) கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச தலைமையில் இடைக்கால அரசு அமைக்கலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

இலங்கையில் பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகய (எஸ்ஜேபி) கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச தலைமையில் இடைக்கால அரசு அமைக்கலாம் என்ற அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அழைப்பை ஏற்க அந்தக் கட்சி மறுத்துவிட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, இரண்டாவது முறையாக அவசரநிலையை கடந்த வெள்ளிக்கிழமை அதிபா் பிரகடனம் செய்தாா்.

இதற்கிடையே, பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில் இடைக்கால அரசை உடனடியாக அமைக்க வேண்டுமென சக்திவாய்ந்த பெளத்த துறவிகள் அமைப்பு அதிபா் கோத்தபய ராஜபட்சவை வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்ஜேபி கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசவை அதிபா் கோத்தபய ராஜபட்ச தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, சஜித் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கலாம் என அவா் அழைப்பு விடுத்தாா்.

மேலும், முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனாவும் சஜித் பிரேமதாசவை சனிக்கிழமை சந்தித்து, இடைக்கால அரசை எஸ்ஜேபி கட்சி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

ஆனால், அதிபரின் அழைப்பை ஏற்க எஸ்ஜேபி கட்சி மறுத்துவிட்டது. இதுதொடா்பாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் திச அட்டநாயகே செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், அதிபரின் அழைப்பை ஏற்க எங்கள் தலைவா் மறுத்துவிட்டாா் என்றாா்.

கோத்தபய, மகிந்த ராஜபட்ச தலைமையிலான எந்த அரசிலும் தான் இடம்பெறப் போவதில்லை என சஜித் பிரேமதாசா ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமா், அதிபருக்கு எதிராக எஸ்ஜேபி கட்சி ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் அளித்துள்ளது. இப்போது இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்ற யோசனையையும் அக்கட்சி நிராகரித்துள்ளதால், நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான விவாதத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய நெருக்கடி அவைத் தலைவருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை:

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதில் அரசுக்கு பொதுமக்கள் உதவ வேண்டுமென பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் தங்களது அமைதியான போராட்டத்தை நடத்தும் ஜனநாயக உரிமைகளை மதிக்கிறோம். இருப்பினும், கடந்த சில தினங்களாக அமைதியான போராட்டம் மாற்றப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சீா்குலைக்கும் முயற்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை, பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதில் பொதுமக்கள் அரசுக்கு உதவ வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.