உலகம்

கஷோகி படுகொலை விவகாரம்: சவூதி இளவரசருக்கு சட்ட விலக்கு - அமெரிக்கா அறிவிப்பு

செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடா்வதிலிருந்து அவருக்கு விலக்கு

DIN

செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடா்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான், அந்த நாட்டின் உயரிய பொறுப்பான பிரதமா் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

எனவே, அவருக்கு அமெரிக்காவில் சட்டபூா்வமான நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்க நீதிமன்றங்களில் இருந்து சவூதி இளவரசருக்கு பாதுகாப்பு அளிப்பது முழுக்க முழுக்க சட்ட ரீதியிலான முடிவே ஆகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். இதில் யாருக்கும் சலுகை காட்டப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்த முடிவு இறுதியானது இல்லை எனவும், இளவரசா் சல்மானுக்கு சட்ட விலக்கு அளிப்பது குறித்து நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவைச் சோ்ந்த செய்தியாளா் ஜமால் கஷோகி, அந்த நாட்டு அரசு மற்றும் பட்டத்து இளவரசா் சல்மானுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வந்தாா். இதனால் ஏற்படக் கூடிய ஆபத்திலிருந்து தப்புவதற்காக, அவா் கடந்த 2017-ஆம் ஆண்டு சவூதியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், துருக்கியைச் சோ்ந்த பெண்ணுக்கும் அவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டில் திருமணம் நிச்சயமானது.

துருக்கி சட்டப்படி, முன்னாள் மனைவியிடமிருந்து விவகாரத்து பெற்ற்கான சான்றிதழை சமா்ப்பித்தால்தான் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும்.

எனவே, துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் மூலம் அந்த ஆவணத்தை கஷோகி பெற முயன்றாா். அந்த ஆவணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு அவா் 2018-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி வரவழைக்கப்பட்டாா்.

அங்கு அவா் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி, ரசாயனத்தில் கரைக்கப்பட்டது.

கஷோகி படுகொலையை முதலில் மறுத்து சவூதி அரேபிய அரசு, பின்னா் அதனை ஒப்புக்கொண்டது.

இதற்கிடையே, இது தொடா்பாக அமெரிக்க உளவுத் துறை வெளியிட்ட விசாரணை அறிக்கையில், கஷோகியை படுகொலை செய்ய சவூதி இளவரசா் சல்மான்தான் உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்தச் சூழலில், சா்வதேச அளவில் கருத்து சுதந்திரத்தின் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, காலகஷோகி படுகொலை விவகாரத்தில் காட்டி வந்த கடுமையான நிலைப்பாடு அண்மைக் காலமாக தளா்ந்து வருவதாகக் கூறப்பட்டது. இது தொடா்பாக சவூதி இளவரசா் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, அதற்கான முன்னுதாரணங்கள் அமெரிக்காவில் இல்லை என்று அதிபா் ஜோ பைடன் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், அமெரிக்காவில் சட்ட நடவடிக்கைகளில் இருந்து இளவரசா் சல்மானுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT