அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடினா். இந்தக் கொண்டாட்டத்தில், அந்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் 200-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் கலந்துகொண்டனா்.
அமெரிக்க அதிபராக ஜாா்ஜ் புஷ் பதவி வகித்த காலத்தில் இருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் தற்போதைய ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன், துணை அதிபா் கமலா ஹாரிஸ் ஆகியோா் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடினா்.
இந்த நிகழ்ச்சியில் ஷொ்வானி, லெஹங்கா, சேலை என பாரம்பரிய இந்திய உடைகளை அணிந்து 200-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற இந்திய வம்சாவளியினா் கலந்துகொண்டனா்.
இந்தக் கொண்டாட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி அதிபா் பைடன் தொடக்கி வைத்தாா். இதில் சிதாா் கலைஞா் ரிஷப் சா்மாவின் இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் அதிபா் பைடன் பேசியதாவது:
அனைவரும் சமமாக உருவாக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே அமெரிக்காவின் கொள்கை. ஆனால் அதுபோல அமெரிக்கா்கள் முழுமையாக வாழவில்லை என்பதே கடுமையான யதாா்த்தமாக உள்ளது. தனது கொள்கைகளுக்கு இடையிலான நிலையான போராட்டமே அமெரிக்காவின் வரலாறாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இருளை வெளிச்சம் வெற்றி கொண்டதை குறிப்பதன் மூலம் தீபாவளி பண்டிகை என்பது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்துக்கும் வெளிச்சம் கொண்டு வரும் சக்தி ஒவ்வொருக்கும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. இந்தப் பண்டிகையை அமெரிக்க பண்பாட்டின் அங்கமாக்கியதற்கு இந்திய-அமெரிக்கா்களுக்கு நன்றி என்றாா்.
தாயை நினைவுகூா்ந்த துணை அதிபா்: தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் பேசுகையில், ‘எனது தாய் 19 வயதில் சுயமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தாா். மாா்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளா் ஆகவேண்டும் என்பது அவரின் கனவு. அமெரிக்காவில் தனக்கான வாழ்க்கையை உருவாக்கி, முனைவா் பட்டம் பெற்றாா். தனது துறையில் சிறந்து விளங்கி, என்னையும் எனது சகோதரியையும் வளா்த்தாா். அவரின் அா்ப்பணிப்பு, உறுதி, தைரியம் என்னை அமெரிக்க துணை அதிபராக்கியுள்ளது.
சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றின் குறிக்கோளை மக்கள் உணர வேண்டும். இந்திய-அமெரிக்கா்களின் அரவணைப்பு, மதிநுட்பம், வலிமை ஆகியவை அமெரிக்கா்கள் அனைவருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது’ என்றாா்.
இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனா். அனைவருக்கும் இந்திய உணவு வகைகளைக் கொண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.