உலகம்

மருத்துவமனை தூய்மை பணியாளரை கரம் பிடித்த பெண் மருத்துவர்

DIN


பாகிஸ்தானில், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளரை காதல் திருமணம் செய்து கொண்டார் அதே மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர்.

இவர்களின் காதல் கதை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் படிக்கப்படும், பகிரப்படும் செய்தியாக மாறியிருக்கிறது.

இந்த காதல் கதை எங்கிருந்து தொடங்கியது என்றால், எம்பிபிஎஸ் படித்து மருத்துவம் பார்த்துவந்த மருத்துவர் கிஷ்வர் சாஹிபா, அதே மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக இருக்கும் ஷாஹ்சத்திடம் தனது காதலை வெளிப்படுத்திய தருணத்திலிருந்துதான்.

மேரா பாகிஸ்தான் என்ற யூடியூப் பக்கத்தில், இந்த காதல் தம்பதி தங்களது காதல் கதையை மிக மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டுள்ளனர். 

இது பற்றி மணமகன் ஷாஹ்ஸத் பேசுகையில், இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறி முடிப்பதற்குள், தனது கணவரை தான் எந்த அளவுக்கு காதலிக்கிறேன் என்பதை கிஷ்வர் கூறினார். 

மருத்துவமனையில் முதல் முறை ஷாஹ்ஸத்தைப் பார்க்கும் போது அவர் தேநீர் தயாரிப்பவர் என்றோ, மருத்துவமனை தூய்மைப் பணியாளர் என்றோ எனக்குத் தெரியாது.  பிறகுதான் அவர் தேநீர் கடை வைத்துக் கொண்டு, மருத்துவமனையிலும் தூய்மைப் பணியாளராக பறந்து பறந்துவேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து அவர் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு காதலாக மாறியது என்கிறார் கிஷ்வர்.

பிறகுதான், எனது காதலை நான் வெளிப்படுத்தினேன். இவருடனான ஒரு அருமையான வாழ்க்கையை வெறும் கல்வி போன்ற தகுதி பார்த்து இழந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்தேன். என் வாழ்க்கையில் பல முக்கிய விஷயங்கள் ஒரே நாளில் எடுத்த முடிவாகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார் கிஷ்வர்.

மருத்துவர்களின் அறையை சுத்தம் செய்து, அவர்களுக்கு தேநீர் கொடுக்கும் வேலையை செய்து வந்தேன். ஒரு நாள் என் செல்லிடப்பேசி எண்ணைக் கேட்டு பிறகு இருவரும் செல்லிடப்பேசியில் பேசுவோம். ஒரு நாள் தான் காதலிப்பதாகக் கூறினார், அதைக் கேட்ட எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. பிறகு கிஷ்வரைப் பார்ப்பதையே தவிர்த்துவிட்டேன். பிறகுதான் கிஷ்வர் என்னை சமாதானம் செய்து, இரு குடும்பத்தான் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என்கிறார் ஷாஹ்ஸத்.

மருத்துவமனையில் நண்பர்கள் தன்னை கேலி செய்ததால், வேலையை விட்டுவிட்ட கிஷ்வர், சொந்தமாக சிறிய மருத்துவமனை தொடங்கி மருத்துவம் பார்க்கவிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT