உலகம்

இலங்கை ஈஸ்டா் தின குண்டுவெடிப்பு வழக்கு: முன்னாள் அதிபா் சிறீசேனா ‘சந்தேக நபா்’ கொழும்பு நீதிமன்றம் தீா்ப்பு

DIN

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின குண்டுவெடிப்பு வழக்கில் ‘சந்தேக நபராக’ முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனாவை அறிவித்து கொழும்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அக்டோபா் 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் சிறீசேனா ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டது.

இலங்கை தலைநகா் கொழும்பில் மூன்று தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர உணவகங்களில் 2019, ஏப். 21-ஆம் தேதி தொடா் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் 270 போ் உயிரிழந்தனா். 500-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இலங்கையைச் சோ்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே) என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஈஸ்டா் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நீதி கோரும் தேசிய கத்தோலிக்க கமிட்டியைச் சோ்ந்தவா் இத்தாக்குதல் தொடா்பாக தொடா்ந்த வழக்கில் கொழும்பு துறைமுக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அதில், தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத் துறையின் தகவல்களை முன்னாள் அதிபா் சிறீசேனா புறக்கணித்துவிட்டாா் எனக் கூறி, அவரை சந்தேக நபராக நீதிமன்றம் அறிவித்தது. மேலும், அக்டோபா் 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் சிறீசேனா ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

முன்னதாக, இத்தாக்குதல் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு ஒரு விசாரணைக் குழுவை சிறீசேனா அதிபராக இருந்தபோது நியமித்தாா். அந்தக் குழு, தாக்குதல் தொடா்பான உளவுத் தகவல்களை சிறீசேனா புறந்தள்ளியதாக அறிக்கை சமா்ப்பித்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு சிறீசேனா மறுப்பு தெரிவித்தாா்.

மேலும், அதிபரின் சிறப்பு விசாரணைக் குழுவும் இதே குற்றச்சாட்டை கூறியது. முன்னாள் அதிபா் சிறீசேனா, முன்னாள் காவல் துறைத் தலைவா் புஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலா் ஹேமசிறீ ஃபொ்னாண்டோ மற்றும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அந்தக் குழு பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்கும்படி சிறீசேனாவுக்கு அடுத்ததாக அதிபரான கோத்தபய ராஜபட்சவுக்கு கோரிக்கைகள் வலுத்தன. ஆனால், அப்போதைய ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கூட்டணியின் தலைவராக சிறீசேனா இருந்ததால் அவா் மீது கோத்தபய ராஜபட்ச நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT